இந்தாங்க கிளியர் ஆடியோ பிரிண்ட்..ஹெச்டி தரத்தில் நெட்டில் ரிலீசான தங்கலான்! விக்ரம் ரசிகர்கள் ஷாக்.!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'தங்கலான்' படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை அந்த படம் பெற்றிருக்கும் நிலையில் தற்போது கிளியர் ஆடியோ, ஹெச்டி பிரிண்ட் உடன் அந்த படம் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பட குழுவினரும் விக்ரம் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் எந்த படம் என்றாலும் அதற்காக அதிக உழைப்பு போட்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். சேது படத்தில் இருந்து தற்போது தங்கலான் படம் வரை ஒவ்வொரு படத்திலும் அவரது அயராத உழைப்பு பாராட்டப்பட்டு வருகிறது.

இருந்தும் கடந்த ஆண்டுகளில் வெளியான சில படங்கள் அவருக்கு சரியாக போகாத நிலையில் தங்கலானை மிகவும் எதிர்பார்த்து இருந்தார். மேலும் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் தோல்விக்கு பிறகு தான் ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் தங்கலான் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ரஞ்சித்தின் நீலம் புரெடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் நேற்று உலக அளவில் வெளியான நிலையில், ரசிகர்களின் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றிருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக ஆகஸ்ட் 15 மற்றும் தொடர் விடுமுறை நாட்களை குறி வைத்து வெளியாகி உள்ள படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருக்கிறது. வரலாற்று பின்னணியில் கேஜிஎப்-ஐ மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படம் விக்ரம் நடிப்பில் மைல்கல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நிச்சயம் இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். வட ஆற்காடு பகுதியில் வசித்த பழங்குடியின மக்கள் சுரங்க தொழிலில் ஈடுபடுவதை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கோலார் தங்க வயலின் வரலாறு, பழங்குடியின மக்களின் உழைப்பு, நிலம் என தனது வழக்கமான அரசியலோடு இந்த படத்தை பா.ரஞ்சித் கொடுத்திருக்கிறார்.
விக்ரமுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆடை, மேக்கப், படத்தின் கலை இயக்கம், ஸ்டண்ட் என அனைத்து விஷயங்களையும் மெனக்கெட்டிருப்பதோடு, ஜிவி பிரகாஷின் இசை படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
இந்த நிலையில் தங்கலான் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பல்வேறு டெலிகிராம் சேனல்களில் கிளியர் ஆடியோ, ஹெச்டி பிரிண்ட் உடன் பல்வேறு வாட்ஸாப் குழுக்களிலும் தங்கலான் படத்தின் லிங்க் வெளியாகி இருக்கிறது. ஏதோ ஒரு தியேட்டரில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி என்றாலும் ஆடியோ இவ்வளவு தெளிவாக எப்படி எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன் மதுரையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெறியான நிலையில் திரையுலகினர் நிம்மதி அடைந்தனர். ஆனால் நேற்று வெளியான தங்கலான் படம் இன்று ஹெச்டி தரத்துடன் வெளியாகி இருப்பது சினிமா ரசிகர்களையும் சினிமா துறையினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் படத்தை திருட்டுத் தனமாக எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications