தலைமை செயலகத்திற்கு விரைந்து வந்த விக்கிரமராஜா.. சிவ்தாஸ் மீனாவிடம் போலீஸ் மீதே புகார்.. பரபரப்பு
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் பெருகி வரும் சமூகவிரோதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இரவு நேர கடைகளில் போலீசாரின் அத்துமீறலை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இரவு நேரங்களில் சில போலீசார் வந்து கடைகளை மூடச்சொல்லி டார்ச்சர் செய்வதாகவும், கடைகளில் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் வணிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதேபோல் மது அருந்துவிட்டு வரும் சமூக விரோதிகள் சிலர், கடைகளில் மிரட்டலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்தவிவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநில செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி ஆகியோர் செவ்வாய்கிழமை அன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்கள்.
அந்த மனுவில் விக்கிரமராஜா கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வணிக உரிமம் புதுப்பித்தலுக்கு சொத்துவரி ரசீது கட்டாயம் என்பதை நீக்கிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிக உரிமம் புதுப்பிப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். ஒற்றைச்சாளர முறையில் வணிக உரிமங்கள் வழங்கிட வேண்டும். சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும். 'வாட்' சமாதான திட்டத்துக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
இரவு நேர கடைகளில் போலீசாரின் அத்துமீறலை தடுக்க வேண்டும். இயற்கை பேரிடர் வணிக பாதிப்புக்கு அரசே காப்பீடு மற்றும் இழப்பீடுகள் வழங்க வேண்டும். சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்தி தர வேண்டும். மாதாந்திர மின் கட்டண முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை கடை வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சமூக விரோதிகளின் அத்துமீறல்களுக்கு முடிவு எட்டப்பட வேண்டும். புதுப்பேட்டை வாகன கழிவு இரும்பு வியாபாரிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டம் ஆப்பூரில் இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்". இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் வந்த நிர்வாகிகள் அளித்த அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications