சபாஷ் சரியான போட்டி! விசிகவை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் புரட்சி பாரதம்! எடப்பாடி அதிரடி!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம் தொகுதி ஒதுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் விசிக -புரட்சி பாரதம் இடையே நேரடி போட்டி நிலவக் கூடும் எனத் தெரிகிறது.
விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தற்போது சிட்டிங் எம்.பி. ஆக உள்ளர். வரும் தேர்தலிலும் மீண்டும் அவரே விழுப்புரம் தொகுதியில் போட்டியிடக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதி விசிகவுக்கு மீண்டும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் விசிகவை எதிர்த்து பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியை மோத விட எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

அண்மையில் விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதிமுக கூட்டணியில் நீண்ட ஆண்டுகளாக பயணித்து வரும் கட்சி புரட்சி பாரதம் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் புரட்சி பாரதம் கட்சி சற்று ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது. திருமாவளவனை அரசியல் மேடையில் பேச வைத்ததே தனது அண்ணன் தான் என்று பூவை ஜெகன் மூர்த்தி பேசிய வீடியோ கூட அண்மையில் சமூக வலைதளங்களில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டாலும் அக்கட்சியின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பது அதிமுக தலைமையின் கறார் கண்டிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரையே நிறுத்த வேண்டும் என லோக்கல் நிர்வாகிகள் சிலர் கட்சித் தலைமையை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் செலவு விவகாரத்தை பொறுத்தவரை அந்தந்த கட்சியும், போட்டியிடும் வேட்பாளரும் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அதிமுக தரப்பில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளில் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
