தீஸ்தா ஆற்றில் மிதந்து வந்த 4 நாள் பிஞ்சு யானை.. மனித வாசம் பட்டா தாய் சேர்க்காது! உடனே செம ட்விஸ்ட்
சென்னை: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள திஸ்தா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 நாட்களே ஆன குட்டி யானைதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. யானைக்குட்டி ஆற்றில் விழுந்துவிட்ட தகவலறிந்ததுமே, வனத்துறையினரும் உள்ளூர் மீனவர்களும், எதை பற்றியும் யோசிக்காமல் ஆற்றில் குதித்தனர்.. குட்டி யானையையும் தேட ஆரம்பித்தனர்..,. அதற்கு பிறகு என்ன நடந்தது!!
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலுள்ளது வைகுந்தபூர் என்ற காட்டுப்பகுதி.. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.30 மணிக்கு யானைக் கூட்டம் ஒன்று தீஸ்தா ஆற்றை கடக்க முயன்றது.

கஜால்தோபா தடுப்பணை அருகே ஆற்றைக் கடக்க முயன்றபோது, கூட்டத்தில் இருந்த 4 நாட்களே ஆன குட்டி யானை ஒன்று திடீரென வேகமான நீரோட்டத்தில் சிக்கி விட்டது.. இதனால் அது தாயிடம் இருந்து பிரிந்துவிட்டது.. ஆற்றின் வேகத்தில் அந்தக் குட்டி யானை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது.
திஸ்தா ஆற்றில் யானைக்குட்டி
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குட்டி யானையை அப்பகுதியில் இருந்த மீனவர்கள் பார்த்துள்ளனர்... உடனடியாக, சிறிய துடுப்புப் படகில் ஆற்றுக்குள் சென்றனர்.. ஆனால், ஆற்றில் வேகமான நீரோட்டம் இருந்ததால், சிறிய படகில் செல்ல சிரமப்பட்டார்கள்.. எனினும் நேரத்தைக் கடத்தாமல் நீரில் போராடிக் கொண்டிருந்த குட்டி யானையை பத்திரமாக பிடித்து படகில் ஏற்றினர்.. பிறகு இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குட்டி யானையை தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர். உடனடியாக கால்நடை மருத்துவர்களைக் கொண்டு குட்டி யானையை பரிசோதித்தனர். நல்லவேளையாக, வெள்ளத்தில் சுமார் 4 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டிருந்தாலும், குட்டி யானைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.
4 கி.மீ. தூரம் மிதந்து வந்த பிஞ்சு யானை
குட்டி யானையை மீட்டது ஒரு பக்கம் என்றால், அதை மீண்டும் தாயிடம் சேர்ப்பது வனத்துறையினருக்கு அடுத்த பெரிய சவாலாக இருந்தது.
ஏனென்றால், குட்டி யானையை மனிதர்கள் நீண்ட நேரம் தொட்டுக் கொண்டிருந்தால், அதன் உடலில் மனிதர்களின் வாசம் படிந்துவிடும். அப்படி நடந்தால் தாய் யானை குட்டியை ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பு இருந்தது. இதனால் வனத்துறையினர் தாமதிக்காமல், தாய் யானை எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்தனர்.. அப்போதுதான் கஜால்தோபா பகுதி அருகே தாய் யானையை உள்ளது தெரியவந்ததும், குட்டி யானையை தாய் யானைக்கு அருகில் கொண்டு சென்றனர்.
குஷியில் துள்ளிய யானைக்குட்டி
தாயை பார்த்ததுமே, குட்டியானைக்கு குஷி தாங்கவில்லை.. உடனே குட்டிக்கு பால் கொடுத்தது. பிறகு தனது கூட்டத்துடனும் குட்டி யானையை சேர்த்துக்கொண்டது.
சிடிகுரி மற்றும் கஜால்தோபா பகுதிகளுக்கு அருகே உள்ள இந்த வைகுந்தபூர் வனப்பகுதி, ஆசிய யானைகள் மற்றும் சிறுத்தைகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.
நல்லவேளை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வெறும் 4 நாட்களே ஆன குட்டி யானையை சரியான நேரத்தில் பார்த்து மீட்ட மீனவர்கள், உடனடியாக அதை மீட்டுவிட்டார்கள்.. . ஒரு சிறிய படகில் உயிரைப் பணயம் வைத்து சென்ற மீனவர்களின் அந்த நேரத்திலான உதவிதான், இந்த குட்டி யானையின் கதையை இப்படி ஒரு நெகிழ்ச்சியான முடிவுக்கு கொண்டு வந்துள்ளது...!!!


Click it and Unblock the Notifications
