தமிழகத்தில் முதல்முறை.. பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு கட்சி பதவி கொடுத்த மார்க்சிஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக பார்வையற்ற ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத நிலையில் திறமையை நம்பி துணிச்சலான முடிவை எடுத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.எஸ்.பாரதி அண்ணா (51). இவருக்கு கண் பார்வை இல்லை. சென்னை அம்பேத்கர் கல்லூரியில் சட்டம் படித்த இவர் செங்கல்பட்டில் பயிற்சி பெற தொடங்கினார்.
வழக்கறிஞரான பாரதி அண்ணா இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உறுப்பினரானார். அவரின் திறமையை கண்ட கட்சி தலைமை அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்துள்ளது.

பார்வை திறன்
இவருக்கு 3 வயது வரை பார்வையில் எந்த பிரச்சினையும் இல்லையாம். பின்னர்தான் பார்வையில் குறைபாடு ஏற்படத் தொடங்கி பின்னர் 2014 ஆம் ஆண்டு பார்வையே மொத்தமாக பறிபோனது. தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் துணைச் செயலாளராக இருந்தவர். இவருக்கு கண் பார்வை இல்லாததால் களத்தில் இருந்து வேலை பார்க்க முடியாத சூழலால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மாற்றுத்திறனாளிகள்
இதையடுத்து திறமை இருந்தும் நம்மால் எதையும் சாதிக்க முடியவில்லையே என்ற மனஉளைச்சலில் இருந்தார். பின்னர் நவீன தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பணிக்கு சேர்ந்தார். இவர் தமிழக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

பார்வையற்ற ஒருவருக்கு பதவி
தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் பார்வையற்ற ஒருவருக்கு இது போன்ற பதவிகளை கொடுத்ததில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முன்னெடுப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. உடலில் உள்ள பிரச்சினையை பார்க்காமல் ஒரு மனிதனின் திறமையை மட்டுமே பார்க்க வேண்டும் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தன்னம்பிக்கை
கண் பார்வையற்றவர்கள் சினிமா துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு பணிகள் என தங்கள் திறமைகள் மூலம் கால் தடம் பதித்து வந்தாலும் அரசியலில் பார்வையற்றவர்களை பெரும்பாலான கட்சிகள் பயன்படுத்த முன் வருவதில்லை. இதற்கு காரணம், அவர்களுக்கான நடைமுறை சிக்கல்தான். எனினும் பாரதி அண்ணாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி பதவியை கொடுத்திருப்பது அவர் மீதான நம்பிக்கையை காட்டுகிறது. மேலும் இதன் மூலம் கண் பார்வையற்றவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் கட்சி ஏற்படுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications