அரசியல் என்ட்ரி.. அதுவும் அவரை எதிர்த்து அவரது கோட்டையில்? மெகா பிளான்? அய்யய்யோ.. பதறிப்போன விஷால்!
சென்னை : ஆந்திர பிரதேச அரசியலில், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துக் களமிறங்கப்போவதாக வெளியான தகவலை நடிகர் விஷால் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தமிழகத்தின் எல்லைப் பகுதியான ஆந்திராவின் குப்பம் தொகுதியில் தமிழர்கள் நிறைய வசிப்பதால், அவர்கள் வாக்குகளை குறிவைக்கும் விதமாக விஷாலை ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிட வைக்க இருப்பதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆந்திராவின் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிட உள்ளதாக வந்த தகவலை நடிகர் விஷால் மறுத்து, அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து
2024-ல் நடைபெற உள்ள ஆந்திர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு போட்டியிட்டால், அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகர் விஷாலை களமிறக்க ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இது ஆந்திர அரசியலிலும், திரையிலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குப்பம் தொகுதியில்
குப்பம் தொகுதி சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி. தமிழகத்தின் எல்லைப் பகுதியான குப்பம் தொகுதியில் தமிழர்கள் நிறைய வசிப்பதால் அந்தத் தொகுதியில் விஷாலை போட்டியிட வைத்து சந்திரபாபு நாயுடுவை தோற்கடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்தியால் விஷாலே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

விஷால் விளக்கம்
இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "ஆந்திர அரசியலில் நான் இறங்கப்போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் சில வதந்திகள் பரவுவதை கேள்விப்பட்டேன். முற்றிலுமாக இந்த தகவலை மறுக்கிறேன். இந்த வதந்தி தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. மேலும், இதுதொடர்பாக என்னை யாரும் அணுகவில்லை.

அப்படியான எண்ணமே இல்லை
இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை. எனக்கு இப்போதைக்கு சினிமா தான் அனைத்தும். ஆந்திர அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை, இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பிஸி
நடிகர் விஷால் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். முன்னதாக, இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் போலீசாக நடித்துள்ள லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் விஷால். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் நிலையில் திடீரென பரவிய செய்தியால் அதிர்ந்துபோய் விளக்கம் அளித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவிடமும்
இதுதொடர்பாக, விஷால் சந்திரபாபு நாயுடுவையும் நேரடியாக தொடர்பு கொண்டு இப்படி ஒரு விவகாரம் ஏன் கிளம்பியது என்றே தெரியவில்லை, அப்படியான ஐடியாவே எனக்கு இல்லை, எப்போதுமே இப்படியான முடிவை எடுக்க மாட்டேன் என தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications