சென்னை தரமணியில் கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய சென்ற அறப்போர் இயக்கத்தினர் 15 பேர் கைது
சென்னை: சென்னை தரமணி அருகே உள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய சென்ற தன்னார்வலர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏரி, குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்படாததால் ஆண்டுதோறும் பெய்யும் மழை நீர் வீணாகி கடலில் கலக்கிறது. இதனால் கோடை காலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பிரச்சினை தலை தூக்குகிறது.
இந்த கோடை காலத்திலும் இப்படி மக்கள் தண்ணீருக்காக நடையாய் நடந்து வருகின்றனர். அவ்வப்போது மழை பெய்தாலும் அது தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் அளவுக்கு இல்லை.

தூர்வார்தல்
இந்த நிலையில் ஏரி, குளம், குட்டை ஆகிய நீர் நிலைகளை அரசு தூர்வாரும் என காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்த மக்கள், அவர்களாகவே தன்னார்வலர்களின் துணையோடு ஆங்காங்கே தூர்வாரி வருகின்றனர்.

முயற்சி
அந்த வகையில் சென்னையில் அறப்போர் இயக்கம் நீர் நிலைகளை ஆய்வு செய்து அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அரசிடம் மனு அளித்தது. எனினும் அது பலனளிக்காததால் தன்னார்வலர்கள் கொண்டு அதை சரி செய்ய முயற்சித்து வருகின்றனர்.

தடுத்து நிறுத்திய போலீஸ்
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு சென்னை தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய 15 பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழு சென்றனர். அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அனுமதி இல்லை
அதையும் மீறி அவர்கள் செல்ல முற்பட்டதை அடுத்த அவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது ஆய்வு செய்யவிடாமல் தடுத்தனர். இது ஏன் என கேட்டதற்கு தரமணி போலீஸார், உங்களிடம் அனுமதி இல்லாததால் ஆய்வு செய்ய விடமாட்டோம் என்றனர்.

அனுமதி தேவையில்லை
ஏரிக்கு தண்ணீர் வரக் கூடிய வரத்துக் கால்வாய் மற்றும் ஏரி நிரம்பினால் தண்ணீர் வெளியேற கூடிய போக்கு கால்வாய் ஆகிய இரண்டும் எந்த நிலையில் இருக்கிறது என பார்ப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வு முடிகளையும் அதற்கான தீர்வுகளையும் அரசுக்கு அனுப்பி வைப்போம். இதற்கு காவல் துறையிடம் அனுமதி தேவையில்லை என்றனர்.

கண்டனம்
இதையடுத்து அவர்கள் 15 பேரும் தரமணி 100 அடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசு செய்ய வேண்டிய பணியை தன்னார்வலர்கள் செய்தால் அவர்களை கைது செய்வது எந்த வகையில் நியாயம் என தன்னார்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications