திமுகவில் ஒரு வெற்றி.. தவெகவில் ஒரு வெற்றி! போட்டியிட்ட இரு தேர்தல்களிலும் வென்ற விஎஸ் பாபு!
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஎஸ் பாபு இன்று பிற்பகலில் உயிரிழந்தார். நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்தாலும் கூட விஎஸ் பாபு இதுவரை இரு தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டு இருக்கிறார். இருப்பினும், இரண்டிலுமே அவர் வெற்றி வாகையை சூடியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக வி.எஸ்.பாபு, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சுவாச ஆதரவு சிகிச்சையும் வழங்கப்பட்டது.

விஎஸ் பாபு
ஆரம்பத்தில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதத்தில் சில மருத்துவ அறிக்கைகள் வெளியான நிலையில், அதன்பிறகு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவின.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டால் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மட்டுமே பதிலளித்தார். மற்ற அமைச்சர்களும் கிட்டத்தட்ட இதே பதிலை தான் கொடுத்தனர். இதற்கிடையே அவர் சட்டசபை உறுப்பினர் என்பதால் அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை கோரி கொளத்தூர் தொகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார்.
மறைவு
இந்நிலையில் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை தரப்பு வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதற்கிடையே அவருக்கு அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார்" என்று தெரிவித்துள்ளது.
நீண்ட அரசியல் அனுபவம்
75 வயதான விஎஸ் பாபு நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகிறார். திமுக, அதிமுக கட்சிகளில் இருந்த அவர் இந்தாண்டு பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்திருந்தார். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டிருந்தாலும் கூட அவர் இதுவரை இரண்டு தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இருப்பினும், இரண்டிலுமே அவர் வென்றுள்ளார்.
இரு தேர்தல்கள்
வி.எஸ்.பாபு கடந்த பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்த நிலையில், அதன் பிறகு நடைபெற்ற சட்டபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இந்த தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்ற வி.எஸ்.பாபு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில் பாபு 82,997 வாக்குகளும், மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் 18,430 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் ஏ.சவுந்தரபாண்டியன் லூதர்சேத் 5,046 வாக்குகளையும் பெற்றனர்.
இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு திமுகவில் இருந்தபோது, புரசைவாக்கம் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. அப்போது வி.எஸ்.பாபு, 90,140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு 82,777 வாக்குகளைப் பெற்றார்.




Click it and Unblock the Notifications
