ஜெம் வீரமணியின் வீட்டில் சிறுமியின் சடலம் புதைப்பு? டிரைவர் வாக்குமூலம்! ஜேசிபியால் தோண்டும் போலீஸ்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக டிரைவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டில் போலீஸார் சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ய ஜெம் வீரமணிக்கு உதவியதாக இவரது டிரைவர்கள் லாசர், பாலா, பாபு ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் டிரைவர் பாலாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது ஜெம் வீரமணி வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு ஜெம் வீரமணி பாலியல் தொல்லை கொடுத்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.
இறந்த சிறுமி
இதனால் அந்த சிறுமி இறந்துவிட்டாராம். என்ன செய்வது என தெரியாமல் தவித்த நிலையில் சிறுமியின் உடலை தனது வீட்டின் பின்புறத்திலேயே புதைக்குமாறு ஜெம் வீரமணி சொன்னார் என டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அந்த டிரைவருடன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டிற்கு சென்ற போலீஸார், சிறுமி எங்கே புதைக்கப்பட்டார்? என கேட்டு, அவர் சொன்ன இடத்தில் ஜேசிபி இயந்திரம் வைத்து தோண்டி வருகிறார்கள்.

தோட்டத்தில் புதைத்தாரா?
அவரது வீட்டின் பின்னால் வாழை உள்ளிட்ட மரங்கள் கொண்ட தோப்பு போல் இருக்கிறது. அங்கு இரும்பு சாரங்கள் போடப்பட்டிருக்கின்றன. அங்கே ஒரு இடத்தில் 10 அடி ஆழத்தில் அந்த சிறுமியை புதைத்ததாக டிரைவர் தெரிவித்தார். அந்த இடத்தில்தான் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டாரா என்பதை அறிய தோண்டும் பணிகள் நடைபெறுகிறது.
ஏழை சிறுமிகள்
ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளின் வீட்டிற்கு காரை எடுத்துக் கொண்டு இந்த டிரைவர்கள் செல்வார்களாம். அங்கு சிறுமிகளுக்கு சாக்லேட், பரிசு பொருட்களை கொடுத்து படிப்பதற்கு உதவி செய்வதாக கூறி ஜெம் வீரமணியின் வீட்டிற்கு அழைத்து செல்வார்களாம். அங்கு அவர் சிறுமிகளை நாசம் செய்தாராம். எனவே இந்த சம்பவத்தில் டிரைவர்களுக்கு பெரும் பங்கு இருப்பதை அறிந்த போலீஸார் நடத்திய விசாரணையில்தான் சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

ஜேசிபி இயந்திரம்
முதலில் ஜேசிபி வாகனத்தை வீட்டினுள் அனுமதிக்க ஜெம் வீரமணியின் மனைவியும் அவரது வீட்டில் இருந்த ஊழியர்களும் தகராறு செய்தார்களாம். பிறகு போலீஸார் பெரும் போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தை உள்ளே கொண்டு சென்றனர். ஒரு வேளை டிரைவர் சொன்னது போல் அந்த இடத்தில் சிறுமியின் சடலம் ஏதேனும் இருந்தால் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபரான வீரமணி, கல்வி உதவி செய்வதாக கூறி ஏழை சிறுமிகளை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமி தற்கொலை
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி பரிசு கொடுப்பதாக வரவழைக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தற்போது ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டதால் அந்த சிறுமியின் தாய் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்துள்ளார்.
720 பக்க குற்றப்பத்திரிகை
இந்த நிலையில் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் 720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், டிஎஸ்பி யாஸ்மின் உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications
