"அடுத்த 18 மாசம் ரொம்ப முக்கியம்!" தங்கம் விலையை முதல்ல கவனிங்க.. நறுக்கென விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகப் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நம்ம ஊரில் தங்கம் தான் எப்போதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதல் சேமிப்பாக இருக்கும். ஆபத்தான காலங்களில் தங்கத்தை எளிதாகப் பணமாக மாற்றலாம் என்பதே இதற்குக் காரணமாகும்.

கொரோனா காலத்தில் கூட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் இருந்ததாலேயே தப்பித்தனர். நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கம் விலை குறைந்ததே இல்லை என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
தங்கம்: இதன் காரணமாகவே தங்கம் விலை குறையும் போதெல்லாம் அவ்வப்போது நம்ம ஊரில் மக்கள் தவறாமல் தங்கம் வாங்கிவிடுவார்கள். கடந்த 10 நாட்களில் பார்க்கும் போது ஒரு கிராம் தங்கம் சுமார் 100 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ரூ.6630 வரை சென்ற நிலையில், நேற்று அது ரூ.6705க்கு விற்கப்பட்டது.. தங்கம் விலை வரும் காலங்களிலும் இதுபோல சற்று குறையுமா அல்லது அதிகரித்தால் எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் இரண்டு முக்கியமான டேட்டா வந்துள்ளது. கன்சுயூமர் ப்ரைஸ் இன்டெக்ஸ் என்ற முக்கியமான டேட்டா வந்திருந்தது. அது சற்று கட்டுக்குள் வந்திருந்தாலும் கூட இன்னும் அதிகமாகவே இருக்கிறது. கோர் பணவீக்கம் 2.7%ஆக இருக்கிறது. இதனால் இப்போதைக்கு அமெரிக்காவில் வட்டி குறைப்பு இருக்காது என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.
இந்தாண்டு இரண்டு முறை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்றார்கள். ஆனால், இப்போது இந்தாண்டு ஒரே ஒரு முறை மட்டுமே குறைக்க முடியும் என்கிறார்கள். ஆனால், டேட்டா சாதகமாக வந்தால் இரண்டு முறை குறைக்க ரெடி என்கிறார்கள். ஆனால், டேட்டா அதற்குச் சாதகமாக வருமா என்றால் அது பெரிய கேள்விக்குறி தான்.
வட்டி விகிதம்: ஆனால், தற்போதைய சூழலில் ஒரு முறை மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். ஒரு முறை என்றால் அது இந்தாண்டு கடைசியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தான் வட்டி குறைப்பு இருக்கும். அடுத்தாண்டும் கூட 4 முறை மட்டுமே வட்டி குறைப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
இதை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அடுத்தாண்டு இறுதிவரை மொத்தமாகவே ஐந்து முறை மட்டுமே வட்டி குறைப்பு இருக்கும். அதாவது அடுத்த 18 மாதத்தில் 5 முறை அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால் அமெரிக்காவில் அடுத்தாண்டு இறுதியில் வட்டி விகிதம் 4%ஆக இருக்கும்.
குறைவான வட்டி இல்லை: 4% என்பதெல்லாம் குறைவான வட்டி விகிதம் இல்லை. இத்தனை ஆண்டுகளாக ஜூரோ சதவிகிதத்தில் இருந்த வட்டி விகிதம் 4%இல் இருப்பதே மிக அதிகம் தான்.. ஆனால், பணவீக்கம் குறையவில்லை என்றால் இதுவும் கூட நடக்காது" என்று அவர் தெரிவித்தார்.
அதாவது அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் வரை தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்காது. அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தவுடன் தங்கம் விலை சட்டென உயரும் என்பதே அவரது கருத்தாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications