கருப்பு புகையாக கிளம்பிய பிரளயம்.. நேபாளத்தில் மலையேறி பூட்டிய வீட்டை உடைத்து தப்பித்த தமிழர்கள்
சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 600 பேர் உயிரிழந்தனர். 2,500க்கும் மேற்பட்டோர் நிலை என்னவானது என்று தெரியவில்லை. நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில் இருந்து 21 தமிழர்கள் சென்னை திரும்பினர். வெள்ளம் திரண்டு வந்தவுடன், தமிழர்கள் சிலர் மலையேறி பூட்டிய வீட்டை உடைத்து தப்பித்தனர்.
நேபாளத்தில் இருந்து தப்பித்து சென்னை வந்த மணிமேகலை என்ற பெண் செய்தியாளர்களிடம், "காலை 6, 7 மணிக்கு கிளம்பி போனோம். கொஞ்ச தூரம் தான் சென்றோம். ஒரு 9 மணிக்கு திடீரென புகை போல கருப்பாக அதிக சத்தத்துடன் ஏதோ கிளம்பியது. சாதாரணமாக ஏதாவது ஏற்பட்டிருக்கும் என்று நாங்கள் சென்ற பஸ்ஸிலேயே காத்திருந்தோம். 10 நிமிடம் தான் இருக்கும். திடீரென சத்தம் அதிகமாகி அருகில் இருந்த வாகனங்கள் எல்லாம் ஆடின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. எங்கள் கண் முன்பாக ஒரு லாரி கவிழ்ந்தது.

மலையேறிய திக் திக் நிமிடம்
இனியும் அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்று எங்கள் டிரைவர் வெளியில் குதித்து தப்பினார். அதனை தொடர்ந்து எங்களை அழைத்து சென்று ஒருங்கிணைத்தவரும் வெளியே குதித்து தப்பினார். அதைப் பார்த்து நாங்களும் டிரைவர் சீட் வெளியே குதித்தோம். பாதுகாப்புக்காக அருகில் இருந்த ஒரு மலையில் ஏறினோம். எங்களுடன் வந்த 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் சிலரால் ஏற முடியவில்லை.
அதில் ஒரு வயதான அம்மா புடவை கட்டியிருந்தார். வேறு வழியில்லாமல் துண்டை கட்டி கொண்டு புடவையை கழற்றி கொடுத்து, இடுப்பில் கட்டி பிடித்து இழுத்து சென்றோம். சிரமப்பட்டு அவரையும் காப்பாற்றி மேலே சென்றோம். அந்தப் பகுதியில் ஒரு ராணுவ முகாம் இருந்தது. இரவு வரை அந்த முகாமில் தங்கியிருந்தோம். எங்களுக்கு பிஸ்கட், நூடல்ஸ், தண்ணீர் பாட்டில் ஆகியவை கொடுத்தனர். அது ஒரு ஷெட் மாதிரி தான் இருந்தது.
பூட்டிய வீட்டை உடைத்து
இரவு அந்த இடத்தில் தங்க முடியாது என்பதால் அருகில் இருந்த ஒரு வீட்டில் தங்க கேட்டோம். அது தகர ஷீட் தான். பூட்டியிருந்த வீட்டை உடைத்துவிட்டு அதில் எங்களை தங்க சொன்னார்கள். பூட்டை உடைத்து தங்கினோம். குளிர் அதிகமாக இருந்ததால் அதிலேயே தங்க முடியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை வரும் என தெரியிவில்லை. அதனால் பெட்ஷீட், ஸ்வட்டர் எதுவும் எடுத்து செல்லவில்லை. குளிரிலேயே தங்கினோம்.
மறுநாள் இரண்டரை மணி நேரம் மலை ஏறினோம். பலரால் முடியவில்லை. கடவுளின் அருளால் சிரமப்பட்டு ஏறினோம். அந்த பகுதியை சேர்ந்த தம்பதி மலை ஏறினர். என்னுடைய பேக்கை பெண் எடுத்து கொண்டார். அவரின் கணவர் என் கையை பிடித்து மலை ஏற உதவினார். குச்சியை ஊன்றி கொண்டே மலை ஏறினேன். மலை ஏறி மருத்துவ முகாமில் பரிசோதனை சென்றனர். அவர்கள் உணவு கொடுத்தனர்.
உதவியால் தப்பித்த அதிசயம்
ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றோம். அந்த நிமிடங்களை எப்படி கழித்தோம் என்றே தெரியவில்லை. நாங்கள் எல்லாம் நண்பர்களாக பழகியதால் அப்படியே பேசி கொண்டு, ஸ்நேக்ஸ் சாப்பிட்டு இயல்பாக இருக்க முயற்சித்தோம். அங்கிருந்த சூழ்நிலையில் தப்பிப்போம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. சூழ்நிலை அப்படி தான் இருந்தது. "கடவுள் மற்றும் நல்ல மனிதர்களின் உதவியால் தப்பித்தோம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
