பைல்களை எடுக்கவே இல்ல.. இப்பவே பதறினா எப்படி.. திமுகவுக்கு அமைச்சர் வெங்கட்ராமன் பதிலடி
சென்னை: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், நிர்வாகத்தில் குளறுபடிகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது. திமுக ஆட்சியின் ஊழல் பைல்கள் தன் டேபிளில் இருப்பதாக முதலமைச்சர் விஜய் கூறினார். இந்நிலையில் நாங்கள் இன்னும் சில பைல்களை பார்க்கவே இல்லை. அதற்குள் திமுகவினர் பதறினால் எப்படி என்று அமைச்சர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ரெட் அழுகல் நோயால் இந்தியா முழுவதும் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை உற்பத்தி குறைவாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்வோம். அரிசி, பருப்பு, ஆயில், காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட பொருட்கள் குறித்தும் கண்காணிப்போம். பொருட்களின் தேவை, வரத்து குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். ஒவ்வொரு சூழலுக்கும் ஒரு பதில் உண்டு.

உங்களுக்கு தகுதி இருக்கா
2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு காலம் உள்ளது. இப்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து, பட்ஜெட் மானிய கோரிக்கை நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற கவனம் செலுத்துவோம். மக்களுக்கான நல்லதுகளை செய்வது மட்டுமே எங்களின் குறிக்கோள். பட்ஜெட்டில் அறிவித்தவற்றை செயல்படுத்துவோம்" என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய்க்கு பிரதமராவதற்கு தகுதி உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு வெங்கட்ராமன், "நாளைக்கு சேனல் தொடங்குவதற்கு உங்களுக்கு தகுதி உள்ளதா. வளர்ச்சி தான் முக்கியம். இருக்கின்ற இடத்தில் என்ன வேலை செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வது முக்கியம். பத்திரிகையாளர்கள், எம்எல்ஏக்கள் சொல்கிறார்கள் என்பதற்காக வேறு வேலைகளை பார்க்க முடியாது. 2029 தேர்தலை பிறகு பார்த்து கொள்ளலாம்.
பைல்கள் ஆய்வு
நாங்கள் மக்களுக்கு 45,000 கோடி ரூபாய் கடன் வாங்கினாம். திமுகவினரை போல 30 சதவிகிதம் பார்டி பண்ட் வாங்கவில்லையே. முந்தைய ஆட்சியில் வாங்கும் கடன்களில் 30 சதவிகிதம் பார்டி பண்டில் சென்றுவிடும். எல்லாம் போக 40-50 சதவிகிதம் நிதி தான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். தவெக ஆட்சியில் அப்படி நடக்காது. இப்போதுதான் பட்ஜெட் மானிய கோரிக்கை நடக்கிறது. இதில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். அவர்கள் கிடப்பில் விட்டு சென்று பல திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
மக்கள் வரிப்பணத்தை முறையாக பயன்படுத்தி வருகிறோம். கஜானாவை காலி செய்தார்கள், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. எதையும் திசை திருப்ப வேண்டியதில்லை. நிறைய பைல்கள் முதலமைச்சர் டேபிளில் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர், எடுங்க சார் எடுங்க என்கிறார். இன்னும் சில பைல்களை எடுக்கவேயில்லை. சில பைல்களை புரட்டி பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதேற்கே பதறினால் எப்படி. துறை ரீதியான ரெய்டுக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
