இரும்புக்கரமா.. அமைச்சர் ரகுபதி, சேகர்பாபுவை அடக்க எங்களுக்கும் தெரியும்.. அண்ணாமலை ஆவேசம்!
சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தமிழக அரசியலின் புதிய விவாதமாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்று நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்து அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு, மதுரையில் குவிந்தவர்கள் இந்து அமைப்பினர் என்று சொல்லக் கூடாது. அவர்கள் பாஜகவினர் தான் என்று தெரிவித்தார்.
அதேபோல் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருப்பரங்குன்றத்தின் சரித்திரம் தெரியுமா? 1926ல் இதே பிரச்சனை வந்த போது, திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை முழுமையாக கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது மேல்முறையீடு சென்ற போது, இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1931ல், சப் ஆர்டினேட் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். முழுமையாக கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்த பின், பிரச்சனை முடிந்துவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக காத்த கோயிலை, இன்று திராவிட கும்பல் குறிப்பாக திமுக கொடுப்பதற்கு தயாராக இருப்பது வேடிக்கையாக உள்ளது.
இதனால் சேகர்பாபு பேசுவதற்கு முன்பாக 1931 ப்ரிவி கவுன்சில் தீர்ப்பை படிக்க வேண்டும். இன்று புதிதாக இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனையை தொடங்குகிறார்கள். அங்கு சென்று சாப்பிடுகிறார்கள். எம்பி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை. ஆனால் சேகர்பாபு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் ரகுபதி, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார்.
பெண்களிடம் தவறு செய்பவர்களை பிடிக்காமல், நேற்றிரவு பாஜகவினர் பலரையும் வீட்டிற்கு சென்று கைது செய்திருக்கிறார்கள். மதுரை நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த ஒரு மணி நேரத்தில் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். அதேபோல் இஸ்லாமியர்கள் சகோதரர்களாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் பிரச்சனையை தொடங்கியவர் யார்?
இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். அமைச்சர் ரகுபதி வார்த்தையை சரியாக பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டுமே மரியாதை கொடுக்கிறோம். அந்த மரியாதையை தற்காத்து வார்த்தையை பயன்படுத்துங்கள்.
முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். இன்னொரு முறை இரும்புக்கரம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால், ரகுபதி இருக்குமிடம் அவருக்கே தெரியாது. தமிழ்நாட்டில் பிரச்சனையை உருவாக்குவது திமுக தான் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை இந்த வீடியோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அமைச்சர் சேகர்பாபு மற்றும் ரகுபதி ஆகியோரின் கவனத்திற்கு என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications