"வலியை தருகிறது.. அதுக்காக இப்படியா? விரைவில் முடிவு கட்டுவோம்".. கனிமொழி ஆவேசம்.. விழிக்கும் அதிமுக
கனிமொழி எம்பி நீட் தேர்வு குறித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: நீட் தேர்வு மூலம் நடைபெறும் அநியாயமான சூழலை நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் தொடர்ந்து உணர்த்துவோம்.. மாணவர்கள் உயிரிழப்பு என்பது அனைவருக்கும் வலியை தரக்கூடியது, இதை வைத்து அரசியல் செய்வது சரியா? சரியானதே இல்லை" என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த காலம் முதலே நீட் தேர்வுக்கு திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு காட்டி வந்தார்.. இதுகுறித்து தன்னுடைய கருத்துக்களையும் பேட்டிகளாகவும், அறிக்கைகளாகவும் வெளியிட்டு வந்தவர்.
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தினால் மாணவர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொண்டபோதெல்லாம் ட்வீட் போட்டு ஆறுதல் தெரிவித்து வந்தவரும்கூட.

நம்பிக்கை
"ஒரு தேர்வின் வெற்றி தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது. தயவு செய்து நம்பிக்கையோடு இருங்கள். பெற்றவர்கள் உங்கள் நண்பர்கள் யாரும் நீங்கள் டாக்டர் ஆகவில்லை என்ஜினியர் ஆகவில்லை என்று உங்களை வெறுக்கப்போவது இல்லை.. நம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவதில்தான் அவர்களுக்கு நீங்கள் காட்டும் அன்பு இருக்கிறது என்பதை தெரிவித்து கொண்டே இருந்தார்.

நம்பிக்கை
இந்நிலையில்தான் திமுக ஆட்சி பொறுப்பேற்றது.. அப்போது, கனிமொழியிடம் நீட் தேர்வு ரத்து குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியிருந்தனர். அதற்கு, "முதலில் கொரோனா சவால்களை வென்றுவிட்டு, நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளாக மேற்கொள்ளும்' என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்... அதுமட்டுமல்லாமல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தாலும், எம்பிக்கள் அனைவரும் நேரில் சென்று வலியுறுத்த வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டால் அதையும் கண்டிப்பாக செய்வோம் என்றும் கனிமொழி கூறியிருந்தார்.

கனிமொழி
இன்றைய தினம் நீட் தேர்வு குறித்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. மற்றொரு பக்கம் அதிமுக திமுக மீது பழியை தூற்றி கொண்டிருக்கிறது.. இந்நிலையில், சென்னை அண்ணாநகர் வடக்கு, சத்யா நகர் பகுதியில் திமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சமூக நீதி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: "நீட் தேர்வை பொறுத்தவரை கண்துடைப்பிற்காக செயல்பட்டது அதிமுக, மாணவர்களின் நலனுக்காக, சமூக நீதிக்காக செயல்படுவது.. நீட் தேர்வு மூலம் நடைபெறும் அநியாயமான சூழலை நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் தொடர்ந்து உணர்த்துவோம்.. மாணவர்கள் உயிரிழப்பு என்பது அனைவருக்கும் வலியை தரக்கூடியது, இதை வைத்து அரசியல் செய்வது சரியா? சரியானது அல்ல.

நீட் தேர்வு
திறமையான மருத்துவர்கள் தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ளார்கள்.. வாய்ப்பற்றவர்களிடம் இருந்து வாய்ப்பை பறிப்பது தான் நீட் தேர்வு.. நீதிமன்றம் மறுத்த விஷயங்கள் ஒன்றிய அரசு மறுத்த பல விஷயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது... அதே போல நீட் தேர்வுக்கும் சரியான முடிவு எட்டப்படும்.. புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம். புதிய கல்விக்கொள்கை அனைவருக்குமான கல்வியை உடைத்துவிடும் கல்வியை பின்னோக்கி செலுத்திவிடும். திமுக.. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவே குரல் கொடுக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications