அதிக இடம் கேட்போம்.. உறுதியாக சொன்ன மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்! திரும்பும் அதிமுக! சாத்தியமா?
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முக்கிய தகவலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பரபரப்பாக கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளன. பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

அதேவேளையில் பாஜக தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் அருகே அவர் அமர்ந்திருந்தார். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக தலைவர்கள் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய கருத்து இருகட்சி தலைவர்கள் இடையேயும் புகைச்சலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் மத்திய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் சென்னை வந்திருந்தார். அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டனர். இந்த வேளையில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்தும், கச்சத்தீவை மீட்க முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது பற்றியும் பேசினார்.
கச்சத்தீவு தொடர்பாக அனுராக் சிங் தாகூர் கூறுகையில், ‛‛கச்சத்தீவை மீட்பது குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திமுக அந்த கூட்டணியில் தான் இருந்தது. அப்போது கச்சத்தீவை மீட்பது தொடர்பாக எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்தார்?'' என கேள்வி எழுப்பினார்.
அதன்பிறகு மத்திய அமைச்சர்கள் மீது இருக்கும் கிரிமினல் வழக்கு, தமிழகத்தில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை பற்றி தொடர்பான கேள்விகளுக்கு, ‛‛மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர்கள் எந்த வழக்குகளிலும் தண்டிக்கப்படவில்லை. தமிழகத்தில் அரசியல் ஆதாயத்துக்காக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படவில்லை. தவறு செய்தவர்கள் மீது உரிய ஆவணங்கள் அடிப்படையில் தான் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பாஜக-அதிமுக கூட்டணி குறித்த கேள்விகளுக்கும், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை பாஜக எதிர்கொள்வது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அனுராக் தாகூர், ‛‛தமிழகத்தில் அதிமுகவிடம் இந்த முறை கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம்'' என்றார். மேலும் ஐபிசி பெயர் மாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ‛‛ இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) பெயர்களை ஹிந்தியில் மாற்றுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. சட்டத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது'' என்றார்.
தமிழகத்தில் அதிமு-பாஜக இணைந்து நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள உள்ளன. அதிமுக ஒதுக்கும் சீட்டுகளில் தான் பாஜக போட்டியிட வேண்டும் என பல முறை அக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இதனால் இருகட்சிகள் இடையேயான சீட் பங்கீட்டில் பிரச்சனை தலைத்தூக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அரசியலை பொறுத்தமட்டில் எதையும் நாம் முன்கூட்டியே கணித்து கூறிவிட முடியாது. ஏனெ்னறால் அரசியலில் யாரும் எதிர்பாராத பல ட்விஸ்ட்டுகள் ஏற்படும். இதனால் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் பாஜகவுக்கு அதிக இடங்கள் வழங்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications