எவ்வளவு வழக்கு போட்டாலும் தைரியமா நின்னு சந்திப்போம்.. செந்தில் பாலாஜி அதிரடி
சென்னை: கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி மோசடி, டிரான்ஸ்பாமர் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு என ஏராளமான வழக்குகள் உள்ளன. தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. எவ்வளவு சோதனை நடந்தாலும் நின்று தைரியமாக எதிர்கொள்வோம் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுவரை எங்கேங்கே சோதனை நடக்கிறது, யார் யாரிடம் சோதனை நடக்கிறது என்பதை முழுமையாக தெரந்து கொள்ளவில்லை. அதைப்பற்றி தெரிந்தவுடன் நான் சொல்கிறேன். டாஸ்மாக் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, இந்த வழக்கை தமிழக காவல்துறை பதிவு செய்துள்ளது.

பயமில்லை
மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் மட்டுமல்ல, எங்கள் மூத்த முன்னாள் அமைச்சர்கள் நேரு, வேலு உள்ளிட்டோர் மீது புகார் பெறுவதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது. ரொம்ப நாள் நீடிக்குமா என தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். என்னை பொறுத்தவரை ஒரு விஷயத்தை தெளிவாக சொல்கிறேன். மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. எந்த வழக்காக இருந்தாலும், எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தாலும் நின்று தைரியமாக எதிர்கொள்வோம்.
அப்படித்தான் எங்களை எங்கள் தலைவர் உருவாக்கியுள்ளார். அதன்படி நாங்கள் நெஞ்சுரத்தோடு நிற்போம். சோதனைகள் வந்தால் சந்தித்து தானே ஆக வேண்டும். தைரியமாக சந்தித்து வெற்றி பெறுவோம். பார்ட்டி பண்ட் தொடர்பாக சட்டமன்றத்திலேயே எங்கள் எதிர்க்கட்சி தலைவர் தெளிவாக விளக்கம் கேட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில், பொது வெளியில், சமூகவலைதளங்களில் அவர்கள் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சில பேர் ஜாமீன் கேட்கும்போது, சில கருத்துகளை சொன்னதாக சொன்னார்கள். எனக்கு வீட்டில் சம்மன் கொடுத்ததால் நான் முன் ஜாமீன் எடுத்தோம்.
விசாரணை
தினமும் காலை, மாலை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறேன். இன்றைக்கு காலை நான் தங்கியுள்ள இடத்திற்கு காவல்துறை வந்து சோதனை செய்ய வேண்டும் என்றனர். சோதனை செய்து கொள்ளுங்கள் என்றேன். சோதனையில் எந்த ஆவணமும் இல்லை என்பதை அவர்களே கையெழுத்திட்டு, என்னிடமும் கையெழுத்து வாங்கி நகல் கொடுத்து சென்றுவிட்டனர்" என்றார்.


Click it and Unblock the Notifications
