சென்னை டூ கோவை.. ரூ.150க்கு போகலாம்! ரூ.8000க்கும் போகலாம்.. இடையில் புகுந்த வந்தே பாரத்! எது பெஸ்ட்
சென்னை: சென்னை டூ கோவை இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிதாக வந்தே பாரத் எக்ஸ்பிரசுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னையில் இருந்து கோவைக்குச் செல்ல நமக்கு இருக்கும் ஆப்ஷன்களை பார்க்கலாம்
நம்மில் பலருக்கும் நீண்ட தூரப் பயணம் என்றாலே ரயில் பயணம் தான் ஞாபகத்திற்கு வரும். அவ்வளவு ஏன் 90ஸ் கிட்ஸ் பெரும்பாலும் ரயில்களிலேயே தங்கள் முதல் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டிருப்பார்கள்.
அதேபோல டிக்கெட் விலை குறைவு, கழிப்பறை, உணவு என பல்வேறு வசதிகள் இருப்பதால் ரயில்களில் பயணிப்பதையே பலரும் விரும்புகிறார்கள்.

வந்தே பாரத்: என்ன தான் உலகின் மிகப் பெரிய ரயில் நெட்வோர்கை கொண்டிருந்தாலும் கூட தொழில்நுட்ப ரீதியாகவும் வசதிகளும் இந்திய ரயில்வேயில் ரயில்கள் குறைவாகவே இருப்பதாக நீண்ட காலமாக விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் இந்தியன் ரயில்வே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது. கடந்த 2019 பிப்ரவரி மாதம் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் மெல்ல பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் விரிவுபடுத்தப்படுகிறது. இப்போது 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது ரயிலாகச் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை- பெங்களூர்- மைசூர் இருக்கும் நிலையில், நேற்று சென்னை கோவை வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை டூ கோவை: அதிவேக ரயிலான இது பெரம்பலூர் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது. கோவையில் இருந்து காலையில் கிளம்பும் இந்த ரயில் மதியம் சென்னைக்கு வந்தடைகிறது. அதேபோல மதியம் சென்னையில் இருந்து கிளம்பி இரவு கோவை செல்கிறது. புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு வாரத்திற்கான டிக்கெட்கள் வெறும் சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. வந்தே பாரத்திற்கான மவுஸ் இப்படி உச்சத்தில் இருக்கும் நிலையில், சென்னை டூ கோவை செல்ல நமக்கு இருக்கும் மற்ற ஆப்ஷன்கள் குறித்துப் பார்க்கலாம். விமான் மூலம் சென்னை டூ கோவை செல்ல ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும். இருப்பினும், காத்திருப்பு, சோதனை, க்ளீயரென்ஸ், லக்கேஜிற்கு வெயிடிங் என எல்லாம் சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஆகும்.

8000க்கு போகலாம்: விமானங்களில் டிக்கெட் விலை மாறிக் கொண்டே இருக்கும். விமானங்கள் முடிந்தவரை ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்லவே விரும்புவார்கள். அப்போது தான் அவர்களுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கும். இதனால் அதிக டிக்கெட்கள் இருக்கும் போது குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கும். அதேநேரம் பயண நாள் நெருங்க நெருங்க டிக்கெட்கள் குறைந்தால், விமான டிக்கெட் விலையும் உயரும். அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் செல்ல 2500 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை ஆகும்.
அடுத்து, காரில் பயணிக்க விரும்பினால் டிராபிக்கை பொறுத்து 8.30 மணி நேரம் முதல் 10.30 மணி நேரம் வரை கூட ஆகும். பெட்ரோல், டீசல் செலவு மற்றும் சுங்க கட்டணத்தைச் சேர்த்தால் 4,500 முதல் 8000 ரூபாய் வரை ஆகும். காரில் டிரைவர் இல்லாமல் அதிகபட்சம் நான்கு பேர் வரை பயணிக்கலாம் என்பதால் ஒருவருக்குச் சராசரியாக ரூ 1125 முதல் 2000 ரூபாய் வரை ஆகும்.
சாலைகள்: அடுத்து டூவீலர் மூலம் செல்ல வேண்டும் என்றாலும் கிட்டதட்ட இதே நேரம் தான் ஆகும். டூவிலருக்கு சுங்க கட்டணம் இருக்காது. இதனால் பெட்ரோலுக்கு மட்டும் 1,500 முதல் 2 ஆயிரம் வரை ஆகும். இரண்டு பேராகச் சென்றால் சராசரியாக 750 முதல் இரண்டாயிரம் வரை ஆகலாம். இருப்பினும் டூவிலரில் செல்வதால் மழை, வெயில் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். இதில் ரிஸ்கும் கூட ரொம்பவே அதிகம்.
அடுத்து பேருந்துகளில் செல்லவும் இதே அளவு நேரமே 8.30 முதல் 10.30 மணி நேரமே ஆகும்.. பேருந்துகளின் வசதிகளைப் பொறுத்து 550 முகல் 3000 வரை கட்டணங்களில் பேருந்துகள் உள்ளது. ஒப்பீட்டளவில் மேலே கூறியதைக் காட்டிலும் இதில் தான் சராசரியான காற்று மாசு குறைவு. எனவே, பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் குறித்த அதிகம் கவலைப்படுபவராக இருந்தால் இதுதான் உங்களுக்கு பெஸ்ட்.

வெறும் 150க்கு போகலாம்: ரயிலை நாம் தேர்வு செய்தால் ரயில் வகையைப் பொறுத்து 6.50 முதல் 10.40 மணி நேரம் வரை ஆகும். அனைத்து முறைகளையும் கம்பேர் செய்யும் போது இதன் டிக்கெட்தான் குறைவானது. மேலும், இதில் ஏற்படும் மாசுபாடு தான் மற்றவையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கும். இதற்கான டிக்கெட் விலை வெறும் 165 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஏசி என்றால் குறைந்தபட்சம் 685 ரூபாய்க்கு செல்ல முடியும்.
சென்னையில் இருந்து கோவை செல்ல இப்படி பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், இதில் வந்தே பாரத் இப்போது புதியதொரு ஆப்ஷனாக சேர்ந்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன வந்தே பாரத்தில் சென்னையில் இருந்து கோவை செல்ல 5.50 மணி நேரம் முதல் 6.10 மணி நேரம் வரை ஆகும். இதற்கான விலை என்பது 1365 முதல் 2458 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications