உப்புமா, பொங்கல், சப்பாத்தி.. புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன?
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் வழங்கப்படும் உணவுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற போதே செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி: இதனையடுத்து கடந்த மாதம் 21-ந் தேதி செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனால் அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் புழல் சிறைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். புழல் சிறையில் மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜி தனி அறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை ஒதுக்கப்பட்டு இருந்தாலும் செந்தில் பாலாஜி சிறை மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
வாரத்தில் 3 நாட்கள் அசைவ உணவு: சிறை மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியை கவனித்துக் கொள்ள ஜெயிலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் வகுப்பு கைதி என்பதால் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட உணவு பட்டியலின் படி, வாரத்தில் மூன்று நாட்கள் செந்தில் பாலாஜிக்கு அசைவ உணவு வழங்கப்படும் எனவும் ஏ கிளாஸ் கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவுப் பட்டியல் செந்தில் பாலாஜிக்கும் பொருந்தும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி வேறு எந்த உணவையும் கேட்பது இல்லை. பட்டியலில் இருக்கும் உணவையே எடுத்துக்கொள்வதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் தகவலாக உள்ளது. சிறை விதிகளின் படி ஏ கிளாஸ் கைதிகளுகு, காலை 6.30 மணிக்கு டீ வழங்கப்படுவதாகவும் காலை 7 மணிக்கு ஒவ்வொரு கிழமைக்கு ஏற்ப உப்புமா, பொங்கல், சப்பாத்தி, முட்டை போன்றவை மாற்றி மாற்றி வழங்கப்படும்.
பகல் 11.30 மணிக்கு ஞாயிறு, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை கோழிக்கறியுடன் அசைவ உணவு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பிற நாட்களில் சாதம், குழம்பு, ரசம் உள்பட சைவ உணவு வழங்கப்படும் எனவும் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை மதிய உணவுகளில் ரவை கேசரி இனிப்பும் வழங்கப்படும் சிறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications