தீபாவளிக்கு தங்கம் வாங்குவது நல்லதுதான்! ஆனா இதை நோட் பண்ணுங்க! இல்லைனா தலையில் மிளகா அரைச்சிடுவாங்க
சென்னை: தீபாவளி உள்ளிட்ட நல்ல நாட்களில் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள். செல்வம் செழிக்க வேண்டும் என்பதற்காகத் தங்கத்தை வாங்குவார்கள். தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் அதில் மோசடி நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, தங்கம் வாங்கும் போது இந்த 5 விஷயங்களை மறக்க வேண்டாம்.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளில் நல்ல விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகப் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவார்கள்.

தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் அதில் மோசடி நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, தங்கம் வாங்கும் போது 5 விஷயங்களை மறக்க வேண்டாம்.
முதல் விஷயம்: முதலில் மத்திய அரசின் கீழ் இயங்கும் பிஐஎஸ் அமைப்பு அளிக்கும் ஹால்மார்க் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தங்கம் தூய்மையை இது உறுதி செய்கிறது. ஹால்மார்க்கின் முத்திரை நீங்கள் வாங்கும் தங்கத்தில் இருப்பதைப் பார்த்து வாங்குங்கள்.
இரண்டாவது மேட்டர்: அடுத்தது HUID எண்ணைச் சரிபார்க்கவும். கடந்த 2021 ஜூலை 1ம் தேதி இந்த ஹெச்.யு.ஐ.டி எனப்படும் Hallmark Unique Identification அறிமுகப்படுத்தப்பட்டது. ஹால்மார்க் செய்யப்பட்ட ஒவ்வொரு தங்க நகைக்கும் தனித்துவமான HUID நம்பர் ஒதுக்கப்படும். இந்த 6 இலக்கு எண் தங்கம் வாங்கும் போது ரொம்பவே முக்கியமானது. மேலும், நீங்கள் தங்கம் வாங்கும் போது பிஐஎஸ் கேர் செயலியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
அதில் உங்கள் HUID நம்பரை பதிவிட்டால் நகைகளின் தூய்மை, பதிவு விவரங்கள் மற்றும் ஹால்மார்க்கிங் மைய தகவல் ஆகியவை தெளிவாகத் தெரியும். இந்த பிஐஎஸ் கேர் செயலி மூலம் நீங்கள் வாங்குவது தூய்மையான தங்கம் தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
எவ்வளவு தூய்மை: அதேபோல நீங்கள் வாங்கும் தங்கம் எந்தளவுக்குத் தூய்மையானது என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதாவது தங்கம் பல்வேறு தூய்மை நிலைகளில் நமக்குக் கிடைக்கிறது. இதை கேரட் என்று அளவிடுவார்கள். 18K, 22K மற்றும் 24K ஆகியவை தான் அதிகம் விற்கப்படும். நீங்கள் வாங்கும் நகையில் எந்தளவுக்குத் தங்கம் இருக்கிறது என்பதை இது குறிக்கும்.
ஏனென்றால், தூய தங்கத்தில் நம்மால் நகைகளைச் செய்ய முடியாது. எனவே, அதில் செம்பை கலக்கியே செய்வார்கள். நீங்கள் வாங்கும் நகையில் எத்தனை சதவிகிதம் தங்கம் இருக்கிறது என்பது முக்கியம். வழக்கமாக விற்கப்படும் 22 கேரட் நகையில் 91.6% தங்கம் இருக்கும். அதேபோல 18 கேரட் தங்கத்தில் 75% தங்கம் இருக்கும். அதேபோல 14 கேரட் என்றால் அதில் 58.5% தங்கம் இருக்கும்.
இதையும் நீங்கள் வாங்கும் நகையிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 22K916 என்றால் 22 கேரட், 18K750 என்றால் 18 கேரட், 14K585 என்றால் 14 கேரட். உங்களிடம் 18 கேரட் நகையைக் கொடுத்துவிட்டு 22 கேரட் தங்க நகைக்கான ரேட்டில் பில்லை போட்டுவிடுவார்கள். எனவே, இதைத் தவறாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.
பில் முக்கியம்: அடுத்து பில்லை தவறாமல் வாங்கிக் கொள்ளுங்கள். சில இடங்களில் சட்டவிரோதமாக எடுத்து வரப்படும் நகைகளுக்கு பில் போடாமல் விற்பனை செய்வார்கள். பில் இல்லாமல் வாங்கினால் சில நூறு ரூபாய் குறைத்துக் கொள்வதாகக் கூட ஆசை வார்த்தை காட்டுவார்கள். ஆனால், அதை நம்பி பில் இல்லாமல் வாங்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் வாங்கிய தங்கத்தில் எதாவது பிரச்சினை என்றால் பேச கூட பில் வேண்டும். எனவே, இந்த தப்பையும் செய்யாதீர்கள்.
டவுட் என்றால் டெஸ்ட் செய்யுங்கள்: கடைசியாக நீங்கள் வாங்கும் தங்கத்தில் வேறு உலோகம் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால், காந்த டெஸ்ட் செய்யலாம். இது என்னவோ ஏதோ எனக் குழம்ப வேண்டாம். இது ரொம்ப ஈஸி.. காந்தத்தைத் தங்கத்தின் அருகே எடுத்துச் செல்லுங்கள். தூய்மையான தங்கம் என்றால் காந்தத்துடன் எந்த வகையிலும் ரியாக்ட் செய்யாது. அதேநேரம் தங்கத்தைக் காந்தம் இழுத்தால் அது கலப்படம் ஆனது என்பதைக் கண்டறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications