Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா?
சென்னை: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வரும் சட்டசபை தேர்தலில் சீட் மறுத்துள்ளது திமுக தலைமை. மனோ தங்கராஜ் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு காரணங்களை உள்ளூர் திமுகவினர் அடுக்குகின்றனர்.
திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சற்று முன் வெளியிட்டார். திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் தற்போது அமைச்சர்களாக உள்ள 3 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. தாராபுரம் தொகுதி கயல்விழி செல்வராஜுக்கும், ராணிப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.காந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர் எம்எல்ஏவாக உள்ள பத்மநாபபுரம் தொகுதி திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 2006 முதல் திமுக வசம் உள்ள இந்த தொகுதி தற்போது சிபிஐஎம்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மனோ தங்கராஜின் வாய்ப்பு பறிபோயுள்ளது.
ஏற்கனவே மனோ தங்கராஜ் மீது பல்வேறு விமர்சனங்கள், புகார்கள் எழுந்து வந்த நிலையில், திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பத்மநாபபுரம் தொகுதியில் கடந்த முறை வென்ற அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
ஒரே எம்.எல்.ஏ
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் பத்மநாபபுரத்தில் மட்டுமே திமுக வென்றது. அதனால் மனோ தங்கராஜ் அமைச்சர் ஆக்கப்பட்டார். அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டது. பத்மநாபபுரம் தொகுதி இந்த முறை சி.பி.ஐ.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு காரணங்களை உள்ளூர் திமுகவினர் அடுக்குகின்றனர்.
அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தபோது கனிமவள கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் மனோ தங்கராஜ். திமுக ஆட்சியில் அமைச்சர் ஆனதும் மகன் மூலம் கல்குவாரிகளில் பணம் வசூல் செய்யத் தொடங்கியதாக புகார்கள் எழுந்து வந்தன. இதன் காரணமாக ஏற்கனவே ஒருமுறை மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் வேறு அமைச்சர் இல்லை என்பதால் 7 மாதங்களுக்குப்பின் மீண்டும் அமைச்சர் பதவி மனோ தங்கராஜுக்கு வழங்கப்பட்டது. மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர் ஆனார்.
கட்சியினரே அதிருப்தி
மனோ தங்கராஜ் மீது திமுகவினரும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். கட்சியில் சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கு வேண்டியவர்களை பதவிகளில் நிர்வாகிகளை கொண்டு வந்தார். மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கினார். தனக்கு ஆதரவானவர்கள் மட்டுமே மாவட்டம் முழுவதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைத்தார் என்கிறார்கள் லோக்கல் திமுகவினர். இதுதொடர்பாக தலைமைக்கும் புகார்கள் சென்றிருந்தன.
மேலும், அமைச்சர் மனோ தங்கராஜின் உடன் பிறந்த தம்பி ஜெயன் தங்கராஜ் அண்மையில் வெளியிட்ட வீடியோக்களும், அவருக்கு சீட் கிடைக்காததற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். தேர்தல் அறிவித்த அடுத்த நாளில் இருந்து மனோ தங்கராஜின் தனிப்பட்ட மோசமான செயல்பாடுகள் பற்றியும், பொதுவெளியில் அவரது செயல்பாடுகள் பற்றி விமர்சித்தும் வீடியோக்களை வெளியிட்டார் ஜெயன் தங்கராஜ். இது சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திமுக தலைமை மனோ தங்கராஜுக்கு கல்தா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
