வானளாவிய அதிகாரம் கொண்டது சபாநாயகர் பதவி.. வேறென்னென்ன அதிகாரங்கள் இருக்கு தெரியுமா?
சென்னை: வானளாவிய அதிகாரம் கொண்ட பதவியாகவே 1980 ஆம் ஆண்டு முதல் இந்த சபாநாயகர் பதவி கருதப்படுகிறது. இதற்கு வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு என்பதை பார்ப்போம்.
தமிழகத்தின் 16ஆவது சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வாகிறார். இவ்வாறு தேர்வு செய்யப்படும் சபாநாயகருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா.
சட்டசபை கூட்டத்திற்கு சபாநாயகர்தான் தலைமை பொறுப்பை வகிப்பவர். எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவை குறிப்பில் பதிவிடுவதற்கும் அதை நீக்குவதற்கும் அதிகாரம் படைத்தவர் சபாநாயகர்.

துறை ரீதியான கேள்வி
அவையில் சட்டசபை உறுப்பினர்கள் துறை ரீதியான கேள்விகளை எழுப்பும் போது அவற்றுக்கு முதல்வர், அமைச்சர்களை பதில் கூற அழைப்பார். சட்டசபை உறுப்பினர்கள் முறைகேடாக நடந்து கொண்டால் அவர்களை அந்த கூட்டத் தொடர் முழுவதுமோ தற்காலிகமாகவோ பங்கேற்க முடியாதபடி தடைவிதிக்கும் அதிகாரம் படைத்தவர்.

கட்டாயம்
என்னதான் ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சார்ந்தவராக சபாநாயகர் இருந்தாலும் இந்த பதவிக்காலம் முடியும் வரை அவர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கட்சி சார்பற்றவராகவே இருக்க வேண்டும். இதை இவர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அவைத் தலைவர்
சட்டசபை வளாக அலுவலகம் முழுவதும் அவைத் தலைவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எம்எல்ஏக்களுக்கு சொந்த கட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாகவோ குழுவாகவோ செயல்பட்டால் அவர்களை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமும் சபாநாயகருக்கு உண்டு.

அதிகாரம்
சட்டசபையின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த உறுப்பினராவது நடந்து கொண்டால் அதுகுறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சபாநாயகருக்கு உரிமை உண்டு, ஒருவேளை உறுப்பினரின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் அவர் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் இருக்கிறது.

நீதிமன்றம் தலையிடாது
சபாநாயகரின் உரிமையில் நீதிமன்றம் தலையிடாது. எம்எல்ஏக்கள் யாராவது ராஜினாமா செய்தாலோ தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ மரணமடைந்தாலோ தேர்தல் ஆணையத்திற்கு சபாநாயகர்தான் தகவல் தெரிவிப்பார். 1980 களில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என பிரகடனப்படுத்தியவர் சபாநாயகராக இருந்த பி எச் பாண்டியன். இவர் முக்கிய தீர்ப்புகளையும் அளித்துள்ளார்.

சபாநாயகர்
மக்கள் பிரச்சினைகளை எந்த வித பிரச்சினையுமின்றி விவாதிக்க வைப்பது, சட்டசபையில் ஏதாவது முக்கிய மசோதாவுக்கோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போதோ வாக்களிக்கும் போது எதிர்ப்பு, ஆதரவு வாக்குகளின் எண்ணிக்கை சமமாக இருந்தால் சபாநாயகர் வாக்களிக்க உரிமை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால் அதை நடத்தி முடிவுகளை அறிவிப்பது சபாநாயகரின் பணியாகும்.












Click it and Unblock the Notifications