மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்!.. ஓட்டுக்கான திட்டமா? - இதோ உண்மையான குளோபல் டேட்டா
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி. இப்படி ஒரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.
என்றோ தமிழ்நாடு நிறைவேற்றிய பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை இப்போதுதான் இந்தியா பின்பற்றத் தொடங்கி உள்ளது. விரைவில் இந்த மகளிர் உரிமைத் திட்டத்தையும் பின்பற்றும் காலம் வரும்.

உலகளவில் பாலின இடைவெளிக்கான தரவரிசையில் 146 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தியாவுக்கு 127-வது இடம் கிடைத்துள்ளது.
உலகளாவிய அளவில் பெண்களின் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 11,000 டாலர் என்றும் அதே ஆண்களின் சராசரி ஆண்டு வருமான 21,000 டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஆண்களின் வருமானத்தில் சரிபாதி அளவுக்குத்தான் பெண்கள் வருமானம் ஈட்டி வருகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

ஆணும் பெண்ணும் சரிசமம் என்று சொன்னாலும் அவர்கள் இன்னும் வருமானம் பெறுவதில் சமநிலை அடையவில்லை என்பதையே இந்த டேட்டா எடுத்துக்காட்டுகிறது. பெறும் வருமானத்தில் பாலின ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இன்றும் உள்ளன என்பதே உண்மை.
பன்னாட்டுத் தொழிலாளர்கள் அமைப்பின் 2022 ஆம் ஆண்டுத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 23.97% ஆக உள்ளது. அதே தமிழ்நாட்டில் இதன் விகிதாச்சாரம் 28.5% ஆக உள்ளது. அப்படி என்றால் 4.08% என்ற அளவில் நம் மாநிலம் முன்னிலையில் உள்ளது.

இப்படிக் குறைவாக மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பை அங்கீகரிக்கவே 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு என்பது 12% ஆக உயர்ந்துள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ள பெண்களுக்கானக் கட்டணமில்லாப் பேருந்து பயணம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் போன்ற முன்மாதிரியான திட்டங்களால் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.
மேலும் பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புக்கான வழிகளையும் இவை திறந்துவிட்டுள்ளன.
இதன் இன்னொரு பகுதியாக 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட'மானது விவசாயம், வீட்டுவேலை, தினக்கூலி என்று குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்கும். அதற்காகவே இதனைத் தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளதாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனைப் புள்ளிவிவரங்களின் தரவுகளை ஆராய்ந்த பிறகே இத்திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. ஆகவே மகளிரின் ஓட்டுக்களைப் பெற வேண்டியே அரசு இதைக் கொண்டுவந்துள்ளது என இதை எளிமைப்படுத்திப் பேசுவது சரியான பார்வையல்ல.
புள்ளிவிவரங்கள் பல சொல்லலாம். அதன் பயனாளிகள் என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம். ஆகவே, அவர்களிடம் பேசினோம்.

"என் பிள்ளை படிக்க புத்தகம் வாங்க 100 ரூபாய் கேட்டு அழுவான். அதை என்னால் கொடுக்க முடியாது. என் கையில் காசு இருக்காது. இப்போது மாசா மாசம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
அந்தப் பணத்தை வைத்து என் மகனுக்கு முதலில் ஷூ வாங்கி தருவேன். அவன் பள்ளிக்கூடம் போக ஷூ இல்லாமல் தினம் அழுவான். அதை வாங்கி தர முடியாமல் நான் மனசுக்குள்ளாகவே ஒவ்வொரு நாளும் புழுங்குவேன். அவ்வளவு கஷ்டம். நாங்கள் அன்றாடங்காய்ச்சிகள். என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்?

என் பிள்ளை புதிய சட்டை கேட்டால், உடனே அக்கம் பக்கத்துக்காரர்களிடம் போய் கடன் கேட்பேன். கடனும் உடனடியாகக் கிடைக்காது. ஆனால், இப்போது நான் யாரையும் போய் கெஞ்சத் தேவையில்லை.
என் பிள்ளைக்குத் தேவையானதை முதல்வர் ஸ்டாலின் ஐயா தரும் ஆயிரம் ரூபாயிலிருந்து வாங்கி தருவேன்" என்கிறார் தினக்கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தாய்.
ஆயிரம் ரூபாய் பெறுகின்ற பயனாளிகள் இந்தத் திட்டத்தைப் பாராட்டிப் பேசுவது இயல்பு. ஆனால், நடுநிலையாக இதைப் பார்க்கும் படித்த வர்க்கத்தினர் என்ன சொல்கிறார்கள்.
அவர்கள் இதையும் இலவசம் என்று மேம்போக்காகப் புரிந்து கொள்கிறார்களா? என அறிய, நுனிநாக்கில் சரளமாக ஆங்கிலம் புழங்கும் இளம் பெண் ஒருவரைக் கேட்டோம்.

அவர், "நிச்சயமாக இது ஒரு முன்னேற்றம்தான். என்னைப் பொறுத்தவரை இந்த 1000 ரூபாய் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், நான் சம்பாதிக்கிறேன்.
ஆனால், தினக்கூலிகளாக உள்ளவர்களின் வாழ்க்கையில் இந்தத் தொகை சின்ன சின்ன சந்தோஷத்தை - நம்பிக்கையை உருவாக்கித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்கிறார்.
சென்னை மாநகரத்தில் பூக்கடை நடத்தி வரும் அக்கா ஒருவர் இத்திட்டம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்?

"எனக்கு வீட்டுக்காரர் கிடையாது. ஒரே ஒரு மகள்தான். அவளையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டேன். இப்போது எனது அம்மாவும் நானும்தான் ஒன்றாக வசிக்கிறோம். ஆண் பிள்ளை கிடையாது. நாங்களே உழைத்து சாப்பிட்டால்தான் உண்டு.
தினம் பூ விற்றுதான் வாழ்ந்துவருகிறேன். இதில் கிடைக்கின்ற வருமானத்தில் தான் குடும்பம் நடைபெறுகிறது. எனக்கு இந்தப் பூ வியாபாரத்தில் பெரிய வருமானம் எல்லாம் இல்லை.
ஏதோ, கைக்கும் வாய்க்கும் பற்றாத வருமானம்தான். மழைக்காலம் வந்துவிட்டால் பூ வியாபாரம் ஒழுங்கா இருக்காது. அப்போது எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவோம்.
இப்போது இந்த வருமானத்துடன் சேர்த்து மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்றால் சும்மாவா சொல்லுங்கள்? எங்களைப் போன்ற ஏழை பாழைகளுக்கு இந்தப் பணத்தை இந்தக் காலத்தில் யார் சும்மா தருவார்கள் சொல்லுங்கள்?

அப்படி இருக்கும்போது அரசாங்கமே எங்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் தருகிறார்கள் என்றால் சந்தோஷம் வருமா? வராதா? மாதம் கரண்ட் பில் கட்டலாம். அல்லது மளிகை சாமான் வாங்கலாம்.
இந்த ஆயிரம் ரூபாய் என்பது என்னைப் பொறுத்தவரைப் பெரிய தொகை. ஆகவே, இது சிறப்பான திட்டம்தான். முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி" என்கிறார்
"நான் பி.எஸ்.சி., படித்துவிட்டு கல்யாணத்திற்குப் பிறகு வீட்டில் சும்மாதான் இருந்தேன். சரி, நாமும் வேலைக்குப் போவோமே என்று சில நிறுவனங்களுக்குச் சென்று வேலைக்கு முயற்சி செய்தேன். அப்படிப் போகும்போது கம்ப்யூட்டர் வகுப்பு படித்திருக்கிறாயா? என்று கேட்டனர்.
கம்ப்யூட்டர் கிளாஸ் போய் படிக்கும் அளவுக்கு எங்கள் ஊர் இல்லை. சின்ன கிராமம்தான். அந்தளவு வசதி இல்லை.
அதன் பிறகு உத்திரமேரூரில் இலவசமாக கம்ப்யூட்டர் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள். போய் விசாரித்தேன். அவர்கள் பெண்களுக்காகவே நடத்துகிறார்கள் எனத் தெரிந்தது.
அப்படி என்றால் தினமும் உத்திரமேரூர் போய் படிக்க வேண்டும். தினம் அதற்குப் போக பத்து வர பத்து 20 ரூபாய் ஆகும்.
அந்த நேரத்தில்தான் இலவசமாகப் பெண்களுக்கு பஸ் விட்டார் முதல்வர் ஸ்டாலின். அதைவைத்தே நான்கு மாதம் வகுப்பைப் படித்து முடித்துவிட்டேன்.
இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தில் எனக்கும் பணம் கிடைத்துள்ளது. இதைவைத்து மேற்கொண்டு இன்னும் படிப்பேன். அல்லது கணவருக்கு வருமானம் இல்லாதபோது, இதைக் கொண்டு வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கலாம்.
அந்தவகையில் இது பெரிய உதவி. முதல்வர் கொண்டு வந்த இரண்டு திட்டங்களால் நான் நேரடியாகப் பயனடைந்திருக்கிறேன். வாழ்நாளில் அவரை என்னால் மறக்கவே முடியாது. ஸ்டாலின் ஐயாவுக்கு என் நன்றி" என்கிறார் இந்தப் பட்டதாரி பெண்.












Click it and Unblock the Notifications