Guidance தமிழ்நாட்டில் 15 பேர் ராஜினாமா.. வேலை தந்த ஆந்திரா முதல்வர் மகன்.. வெடித்த 'மோல்' சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance Tamil Nadu-வில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியேறிய விவகாரம் தற்போது தமிழக-ஆந்திரா இடையிலான முதலீட்டுப் போட்டியை புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஊழியர்கள் ராஜினாமா செய்தது, ஆந்திராவில் வேலை பெற்றது, தகவல் கசிவு குற்றச்சாட்டு என இந்த விவகாரம் பல்வேறு கோணங்களில் பேசப்படுகிறது.

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டது போல் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால், ஜூலை மாத தொடக்கத்திலேயே Guidance Tamil Nadu நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Tamil Nadu Andhra

ராஜினாமா செய்ய வைத்தனர்

அங்கு பணியாற்றிய சில முன்னாள் ஊழியர்கள் கூறிய தகவல்களைச் சுட்டிக்காட்டி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கைடன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்களிடம் ராஜினாமா கடிதத்தை இரண்டு நாட்களுக்கு முன்பே தேதியிட்டு எழுதுமாறு அறிவுறுத்தினார்களாம். 20 நிமிடங்களுக்குள் அவர்களுடைய அலுவலக மெயில் முடக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்களாம். மேலும், ராஜினாமா செய்த ஊழியர்களில் ஒருவர் தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மிரட்டப்பட்டதாக நான்கு முன்னாள் ஊழியர்கள் கூறியுள்ளார்களாம்.

நாயுடுவின் மகனின் கவனத்திற்குப் போனது

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் ஆந்திரப் பிரதேச அரசின் கவனத்திற்குப் போயிருக்கிறதாம். இந்த விவகாரம் ஜூலை 7-ம் தேதி, தென் கொரியாவின் சியோலில் இருந்து புசான் நகருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஆந்திர ஐடி அமைச்சர் நாரா லோகேஷிடம் (முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்), ஆந்திரப் பிரதேச பொருளாதார வாரிய அமைப்பின் (AP EDB) தலைமைச் செயல் அதிகாரி சகிலி ஷான் மோகன், கைடன்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் ராஜினாமா செய்த விவரத்தைத் தெரிவித்தார்.

ஆந்திராவில் வேலைக்குச் சேர்ந்தனர்

இதையடுத்து, ராஜினாமா செய்த ஊழியர்கள் அனைவருக்கும் ஆந்திரப் பிரதேச முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பில் வேலை வழங்குமாறு நாரா லோகேஷ் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் மூன்று முன்னாள் கைடன்ஸ் ஊழியர்கள் ஆந்திராவின் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொண்டு, தமிழக கைடன்ஸ் நிறுவனத்தைப் போன்றே முதலீடுகளை ஈர்க்கும் பணியில் செயல்படும் ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் அவர்கள் பணியில் சேர்ந்தனர்.

ஆந்திராவின் முதலீட்டு மாநாட்டில் முக்கிய பங்கு

ஆந்திராவில் பணியில் சேர்ந்த அந்த மூன்று ஊழியர்களும், கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சிஐஐ பார்ட்னர்ஷிப் சம்மிட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றினர். இந்த மாநாட்டின் மூலம் ஆந்திரப் பிரதேச அரசு சுமார் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டு உறுதிப்பாடுகளைப் பெற்றதாகத் தகவல் வெளியானது. மாநாடு சிறப்பாக நடைபெற பணியாற்றியதற்காக அந்த மூன்று முன்னாள் ஊழியர்களையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டி கௌரவித்தார்.

லிங்க்ட்இன் பதிவும் தமிழகத்தில் எழுந்த 'மோல்' சர்ச்சையும்

மாநாடு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, ஆந்திர EDB-ல் இணைந்த முன்னாள் Guidance ஊழியரான கிறிஸ்டோ லாரல் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், நான்கு மாத மௌனம், பல போராட்டங்கள், விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றுக்குப் பிறகு புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணியில் புதிய நோக்கத்துடன் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக ஊடகங்களில் கைடன்ஸ் நிறுவனத்தில் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், நிறுவனத்தில் 'மோல்' எனப்படும் உளவு நபர் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்திகள் வெளியான நேரம் குறித்து, கைடன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறிய சில முன்னாள் ஊழியர்கள் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தியிடம் பேசும் போது சந்தேகம் எழுப்பினார்கள். ஏனெனில் கைடன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஆந்திர EDB நிறுவனத்தில் இணைந்தது ஆகஸ்ட் மாதத்திலேயே நடந்தது தான் காரணம்.

கைடன்ஸ் நிறுவனத்தில் புதிய கட்டுப்பாடுகள்

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்புகளுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில் கைடன்ஸ் நிறுவனத்தில் புதிய பணியாளர் ஒப்பந்த விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறதாம். ஊழியர்கள் போட்டி நிறுவனத்தில் சேருவதற்கு ஒரு ஆண்டு கூலிங் ஆஃப் பீரியட் நிபந்தனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதேபோல் பணியில் சேர்ந்த பிறகு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறுவனத்தில் தொடர வேண்டும் என்ற 'லாக்-இன் பீரியட்' நிபந்தனைகளை விதிக்கப்பட உள்ளதாம்.

ஆந்திர அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்தபோது கண்காணிப்பா?

ஆந்திர EDB அதிகாரிகள் முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக தமிழகத்திற்கு வந்தபோது, அவர்கள் சந்தித்த இடத்திற்கு வெளியே தமிழக கைடன்ஸ் அமைப்பு கண்காணித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆந்திராவில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களைக் கண்காணித்ததாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால் இதனைத் தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எஃப்.ஐ.ஆர். போடப்படும் என்று மிரட்டப்பட்டதாகப் பரவும் தகவல்களும் உண்மை இல்லை என்று அரசு அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

கைடன்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறுவது புதிதல்ல என்றும், வழக்கமாக சுமார் 17% ஊழியர்கள் வெளியேறுவது நடைபெறும் என்றும், இந்த ஆண்டும் ஊழியர்கள் வெளியேறிய விகிதம் வழக்கமான அளவிலேயே இருந்ததாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டியில் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பில் பணியாற்றிய அனுபவமுள்ள ஊழியர்கள் ஆந்திராவின் முதலீட்டு அமைப்பில் இணைந்திருப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்களா அல்லது அவர்களே ராஜினாமா செய்து சென்றார்களா என்பது வெளிப்படையாகத் தெரிந்தால்தான் சர்ச்சை முடிவுக்கு வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+