பீகார் மாதிரி தமிழ்நாட்டிலும் நடக்கும்.. காங்கிரசை தூக்கி எறிய போறாங்க.. வானதி சீனிவாசன்
சென்னை: வளர்ச்சியும், பாதுகாப்பும் தான் முக்கியம் என்று நினைத்து மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்றும், பீகாரை போன்று தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் துடைத்தெறிவார்கள் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் அவர் இங்குள்ளவர்கள் பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தபோதும் கூட அங்கே காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கிறது என்று விமர்சித்தார்.
நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலம் பெற்றது பாஜக - நிதிஷ் குமாரின் ஜேடியூ கூட்டணி.

தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதில் 61 தொகுதிகளில் களம் இறங்கிய காங்கிரஸ் கட்சியால் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு மரண அடியாகவே பார்க்கப்படுகிறது.
பீகார் 2020 சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அசுர வெற்றியை பதிவு செய்துள்ளதால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் வெற்றியை இனிப்பு, பட்டாசு வழங்கி கொண்டாடி தீர்த்தனர். இதேபோல் தமிழகத்தில் பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தமிழக பாஜக அலுவலகம் கமலாலயத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இதில் வானதி சீனிவாசன், பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், பீகாரை போன்றே தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் துடைத்தெறிவார்கள்.. இங்குள்ளவர்கள் பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தபோதும் கூட அங்கே காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கிறது என்று விமர்சித்தார். வானதி சீனிவாசன் கூறியதாவது:-
முதலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து பெண்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து உள்ளார்கள். பீகார் மக்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம் என நினைத்துள்ளனர். இது தான் வாக்காக மாறியுள்ளது. அடுத்து நடக்க உள்ள தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்க தேர்தல்களிலும் பீகார் தேர்தல் முடிவு பிரதிபலிக்கும்.
தமிழக சட்டசபை தேர்தலிலும் இதுபோன்ற வெற்றி எங்களுக்கு கிடைக்கும். எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். பெண்கள் அரசியலில் வாக்காளர்கள் மட்டுமின்றி, அரசியலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவார்கள் என்பதை பீகார் பெண்கள் நிரூபித்து இருக்கிறார்கள். பீகார் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் அணி நிர்வாகிகளுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்திலும் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு என்.டி.ஏ கூட்டணியே ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்து, முடிவெடுத்து விட்டார்கள். எனவே வரும் தேர்தலில் பாஜகவுக்கே அவர்கள் வாக்களிப்பார்கள். பீகாரை போன்று தமிழகத்திலும் மாற்றம் வரும். பீகாரில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் விரைவில் காங்கிரசை மக்கள் துடைத்தெறிவார்கள்.
காங்கிரஸ் கட்சி மக்களை விட்டு வெகுதூரத்திற்கு சென்று விட்டது. ராகுல் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை. இங்கு உள்ளவர்கள் பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தும் அங்கே காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கிறது. தேர்தல் நிபுணர்கள் எல்லாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதையும் பீகார் தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.. என்று கூறினார்.












Click it and Unblock the Notifications