சென்னை ஆவடியில் யாருக்குமே இப்படி ஆகக்கூடாது.. பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்.. தம்பதிக்கு எமனான கார்
சென்னை: சென்னை ஆவடியில் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாழ்க்கை நன்றாக போய்கொண்டிருந்தது. ஆனால் திடிரென தறிகெட்டு ஓடிய கார் எமனாக மாறியுள்ளது. தம்பதி சென்ற இருசக்கர வாகனத்தை கார் மோதி இழுத்துச் சென்றது. கார் டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு தான் விபத்திற்கு காரணம் என்கிறார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை போலீசார் உறுதி செய்தால் தான் தெரியவரும்,
சென்னை திருவேற்காடு பள்ளிக்குப்பம், ராஜீவ் நகரை சேர்ந்த 41 வயதாகும் அறிவரசன் அங்குள்ள தனியார் கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரண்யாவுக்கு 36 வயது ஆகிறது. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்த நிலையில் அறிவரசன் அண்மையில் தனது மனைவி சரண்யாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஆவடி - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். ஆவடி வசந்தம் நகர் அருகே அறிவரசன் சரண்யா தம்பதி சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார் திடீரென மோதியது இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்பற கவிழ்ந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறிவரசன், சரண்யா தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு மருத்துவர் பாரிமார்க்ஸ் என்பவரை படுகாயங்களுடன் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள் மேலும் இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் தற்போது விபத்தில் தாய், தந்தை இருவருமே உயிரிழந்துள்ளன்ர. இதுபோன்ற வேறு எவருக்கும் நடக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். குழந்தைகளை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications