கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம்
சென்னை: நானும், எனது நண்பரும் வாரத்தில் 2 நாட்கள் கோயம்பேடு மதுபான விடுதிக்கு செல்வது வழக்கம். அங்கு வேலை செய்யும் சிலர் எங்களுக்கு நண்பர்கள் என்பதால் சில நேரங்களில் இலவசமாக சென்று வருவோம். ஜோடியாக சென்றால் நுழைவு கட்டணம் இல்லை என்பதால் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் இருசக்கர வாகனத்தை பதிவு செய்து அங்கு வந்த யான்சி மற்றும் அவரது 17 வயது தோழி ஆகியோர் தங்களை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறியதால் அவர்களை நுழைவு கட்டணம் இல்லாமல் அழைத்துச் சென்றோம்" அன்று என்ன நடந்தது என்று பெண்ணுடன் சென்ற இளைஞர் பேசிய வீடியோ பற்றி பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சான் குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த 18 வயதாகும் யான்சி என்பவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான தோழிகளை பார்க்க சென்னை ராமாபுரம் வந்திருக்கிறார். அப்போது யான்சி மற்றும் அவரது தோழிகள் கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மதுபான பாருக்கு சென்றார்கள். அங்கு மதுஅருந்தி விட்டு நடனமாடும் போது, அங்கிருந்த மேலும் சில இளைஞர்கள், இவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அனைவரையும் அங்கிருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றிவிட்டார்களாம்.

ஏழு பேர் கொண்ட கும்பல்
இதனால் பாரில் தகராறில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் கோபத்தில் வெளியேறி உள்ளது. அதேபோல் அங்கிருந்து இளம்பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதை பார்த்த ஏழு பேர் கும்பல், இவர்கள் மீது காரை ஏற்றினர். இதில் படுகாயம் அடைந்த யான்சி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 17 வயது தோழி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோயம்பேடு போலீசார் அதிரடி
இந்த சம்பவம் தொடர்பாக பாலகுரு, கல்லூரி மாணவர் கிஷோர் குமார், சுமன், ஜோஸ்வா உள்பட 7 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 7 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கைதான பாலகுரு, கிஷோர்குமார், ஜோஸ்வா ஆகிய 3 பேர் மட்டும் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மற்ற 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நுழைவு கட்டணம் இல்லை
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்களுடன், அந்த மதுபான பாருக்கு சென்ற அர்ஷத் என்ற வாலிபர், உள்ளே நடந்த சம்பவம் தொடர்பாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறுகையில், "நானும், எனது நண்பனும் வாரத்தில் 2 நாட்கள் அந்த மதுபான விடுதிக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளோம். அங்கு வேலை செய்யும் சிலர் எங்களுக்கு நண்பர்கள் என்பதால் சில நேரங்களில் இலவசமாகவும் சென்று வருவோம். ஜோடியாக சென்றால் நுழைவு கட்டணம் இல்லை என்பதால் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் இருசக்கர வாகனத்தை பதிவு செய்து அங்கு வந்த யான்சி மற்றும் அவரது 17 வயது தோழி ஆகியோர் தங்களை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறியதால் அவர்களை நுழைவு கட்டணம் இல்லாமல் அழைத்துச் சென்றோம்.
மது அருந்தினார்கள்
அங்கு யான்சி உள்பட 2 பெண்களும் மது அருந்தினர். அப்போது அங்கு நடனமாடிக்கொண்டிருந்த சிலர் அந்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. என்னிடம் இதுபற்றி கூறினார். நான், அந்த வாலிபர்களை தட்டிக்கேட்டதால் என்னையும் தாக்கினார்கள். பின்னர் பாதுகாவலர்கள் எங்களை சமரசம் செய்தனர். இதற்கிடையில் அந்த வாலிபர்கள், அங்கிருந்த மேலும் சில பெண்களிடம் இதுபோல் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தார்கள். இதனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டனர்.
இருசக்கர வாகனத்தில் சென்றோம்
இந்த நிலையில் பெண்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்சென்று கோயம்பேட்டில் விடுவதற்காக எங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டோம். நான், இருசக்கர வாகனத்தை ஓட்ட, பெண்கள் இருவரும் நடுவில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு பின்னால் எனது நண்பர் அமர்ந்து கொள்ள ஒரே வண்டியில் 4 பேர் பயணம் செய்தோம்.
காரில் வந்து மோதினார்கள்
அப்போது மதுபான விடுதிக்குள் ஏற்கனவே தகராறு செய்த நபர்கள், அந்த வாலிபர்கள் சென்ற கார் மீது கல்லை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். ஆனால் நாங்கள் தான் கல்லை எறிந்ததாக நினைத்த அவர்கள், காரை நாங்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்து மோதினார்கள். முதல் முறை இடித்த போது வாகனம் கீழே விழவில்லை. பின்னர் 2-வதாக வேகமாக வந்து இடித்ததால் 4 பேரும் தூக்கி வீசப்பட்டதில் யான்சி அதே இடத்தில் உயிரிழந்து விட்டார். 17 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். நானும், எனது நண்பரும் லேசான காயம் அடைந்தோம்" இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
மதுபான பாருக்கு சீல்
இந்தநிலையில் 18 மற்றும் 17 வயது சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் தங்கள் வயதை அதிகரித்து காட்டுவதற்காக போலியான ஆவணத்தை காண்பித்து உள்ளே சென்று இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் அந்த மதுபான பாருக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. மாணவி யான்சியின் உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனிச்சங்குப்பத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மது போதையில் ஏற்பட்ட ஆத்திரம் ஒரு பெண்ணை அழித்துள்ளது. அதேபோல் ஏழு பேரும் ஒரே நாளில் வாழ்க்கையை தொலைத்துள்ளார்கள்..












Click it and Unblock the Notifications