தாறுமாறாக எகிறி அடிக்கும் "தக்காளி.." நீங்க எதிர்பார்க்காத பாதிப்பு எல்லாம் இருக்கு! எப்போது குறையும்
சென்னை: கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளதால், நடுத்தர மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். விலை எப்போது குறையும் என்பது குறித்து வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
நமது நாட்டில் சமையலில் தக்காளியைத் தவிர்க்கவே முடியாது. பெரும்பாலான உணவுப் பொருட்களைத் தக்காளி இல்லாமல் சமைக்கவே முடியாது. சைவம், அசைவம் என எதுவாக இருந்தாலும் தக்காளி ரொம்பவே முக்கியம்..

இதனால் தக்காளி விலையும் முக்கியம்.. தக்காளி விலை உயர்வது நடுத்தர மக்கள் வரை சமையலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் தக்காளி விலை சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தக்காளி: இந்தச் சூழலில் தான் சில நாட்களாகத் தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. தக்காளி வரத்துக் குறையும் நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்கிறது. சில நாட்களில் தக்காளி விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.40க்கு விற்கப்பட்ட தக்காளி இப்போது ரூ.100ஐ கடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே தக்காளி விலை 100ஐ தாண்டியே விற்று வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினசரி 1200 டன் தக்காளி வரும் என்ற நிலையில், இருப்பினும் பல காரணங்களால் சில காலமாகவே வரத்து குறைந்துள்ளது. இப்போது கோயம்பேடு மார்கெட்டிற்கு 600 முதல் 700 டன் தக்காளி மட்டுமே வருகிறது. சில நாட்களில் தக்காளி விலை அதிகரிக்க இதுவும் முக்கியம் வழக்கமாகவே கோடைக் காலத்தில், பாசன நீர்ப் பற்றாக்குறை, கடும் வெயில் காரணமாகத் தக்காளி உற்பத்தி கணிசமாகக் குறையும்.
100ஐ தாண்டிய விலை: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளில் தக்காளி விலை உச்சத்தில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. இது பல லட்சம் குடும்பங்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தக்காளி விலை ரூ.80 முதல் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிக வெப்பம் மற்றும் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவே தக்காளி உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விலை மடமடவென உச்சம் தொட்டுள்ளது. தக்காளி விலை என்பது குடும்பங்களுக்கு மட்டுமின்றி, நாட்டிற்குமே சிக்கல் தான். தக்காளி விலையால் நாட்டிற்கு என்ன பிரச்சினை என யோசிக்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.!
பணவீக்கம்: கடந்த சில மாதங்களாகப் பணவீக்கம் (inflation) தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தச் சூழலில் தக்காளி விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளது பணவீக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். முன்னதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸும் எல் நினோ காரணமாகப் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பல மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில நாட்களில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தக்காளி விலை இந்த மாதம் முழுக்க இதே அளவில் இருக்கும் என்றே வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே மக்களுக்கு உதவும் வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி இப்போது ரூ 68 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தக்காளி மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் வேறு சில காய்கறி விலையும் உச்சத்தில் இருக்கிறது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.45, சாம்பார் வெங்காயம் ரூ.40, பாகற்காய் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications