எம்ஜிஆருக்கே வந்த எதிர்ப்பு! அமைச்சர் பதவி தீர்மானத்திற்கு எதிராக குதித்த உதயநிதி! என்னதான் நடந்தது?
சென்னை: தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவினர் யாரும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார். இது தலைமைக்கு தேவையில்லாத தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த கோரிக்கைக்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கின்றனவாம்.
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென நேற்று திருச்சி, திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற போது அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

உதயநிதி எதிர்ப்பு
ஆனால் உதயநிதி ஸ்டாலின் இதற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தார். அதன்படி, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

என்ன காரணம்?
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் இந்த திடீர் அறிவிப்பிற்கு பின் என்ன காரணம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் இரண்டு விதமான காரணங்களை சொல்கிறார்கள். அதன்படி, மாவட்ட அளவில் தீர்மானங்களை நிறைவேற்றுவதால் தலைமைக்கு பெரிதாக தர்மசங்கடம் எதுவும் இல்லை. ஆனால் மாவட்ட அளவில் அழுத்தம் கொடுத்து பதவி பெற உதயநிதி விரும்பவில்லை. பதவி தானாக வரட்டும் என்று அவர் கருதுவதாக உடன்பிறப்புகளின் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

எம்எல்ஏ
இரண்டாவது விஷயம்.. உதயநிதி ஸ்டாலின் தற்போது எம்எல்ஏவாக இருப்பதால் அவர் எளிதாக சினிமா பணிகளை செய்து வருகிறார். ஆனால் அவர் அமைச்சரானால் படம் வெளியிடுவது, படத்தில் நடிப்பது உள்ளிட்ட பணிகளில் சிக்கல் ஏற்படும். உதாரணமாக எம்ஜிஆர் முதல்வர் ஆன பின் அவர் சினிமாவில் நடிப்பதை திமுகதான் எதிர்த்தது. கருணாநிதிதான் அப்போது எம்ஜிஆர் சினிமாவில் நடிப்பதை கடுமையாக எதிர்த்தார்.

சினிமா பிஸ்னஸ்
இப்போது உதயநிதி அமைச்சர் ஆனால் இதே எதிர்ப்பு அவருக்கு எதிராக வரலாம். இப்போது உதயநிதி சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதனால் உடனே அமைச்சர் ஆவதில் சிக்கல் ஏற்படலாம். இந்த நிலையில்தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் சினிமா வெளியிடுவது அல்லது படங்களில் நடிப்பது உதயநிதிக்கு சிக்கல் ஆகலாம். அமைச்சர் ஆன பின் இந்த பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதோடு அமைச்சராக இருப்பவர் நேரடியாக வேறு பிஸ்னஸ்களை செய்வதிலும் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

மாவட்ட திமுகவினர்
இப்படிப்பட்ட நேரத்தில் மாவட்ட அளவில் திமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றுவது அவருக்கும், கட்சிக்கும் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டே அவர் இப்போதைக்கு தற்காலிகமாக இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்று கூறப்படுகிறது. அதாவது நிரந்தரமாக இல்லாமல்.. இப்போதைக்கு கமிட் ஆன படங்கள் முடியும் வரை உதயநிதி கொஞ்சம் பொறுமை காக்க நினைப்பார். அதனால்தான் தனக்கு ஆதரவான தீர்மானங்களை நிறுத்தும்படி அவர் சொல்லி இருக்கலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications