சசிகலாவின் ‘திடீர்’ மீட்டிங்.. சென்னைக்கு பறந்த ஆதரவாளர்கள்.. ‘முடிவு’ எடுத்தாச்சா? என்ன நடக்குது?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கைகோர்க்க இருப்பதாகவும், விரைவில் இவர்களின் சந்திப்பு நிகழக்கூடும் என்றும் கூறப்படும் நிலையில், சசிகலா தனது வீட்டில், ஆதரவாளர்களைச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்டுள்ளார்.
சென்னை தியாகராக நகரில் உள்ள தனது வீட்டில், மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை சசிகலா சந்தித்துப் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்த சசிகலா, மீண்டும் விரைவில் அடுத்தகட்ட பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
அதிமுகவில் இணைய சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சசிகலா தனது ஆதரவாளர்களை வீட்டிலேயே சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்கு வர வேண்டாம்
சமீபத்தில், தனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம், சிரமப்பட்டு எனது இல்லத்துக்கு வருவதை தவிர்த்து விட்டு உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள், நானே விரைவில் உங்களை எல்லாம் நேரில் சந்திக்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன் என்று சசிகலா அறிவித்திருந்தார்.

ஆதரவாளர்களைச் சந்திக்கும் சசிகலா
இந்நிலையில், தற்போது சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டிலேயே தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார் சசிகலா. மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை அழைத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னைச் சந்திக்க யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் எனக் கூறிய சசிகலா, ஒரே வாரத்தில், ஆதரவாளர்களை வீட்டுக்கே அழைத்துப் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த மனு மீதான விசாரணை நாளை பட்டியலிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசித்து வருகிறார். அவரை தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அழைப்பு
முன்னதாக, தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் என அனைவருக்கும் வாருங்கள் இணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார். எடப்பாடி பழனிசாமி அதனை நிராகரித்தார். ஆனால் சசிகலா, தினகரன் ஆகியோர் ஓபிஎஸ்ஸின் அழைப்புக்கு நேசக்கரம் நீட்டியுள்ளனர். இதனால், மூவரும் ஓரணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

உறுதி செய்த சம்பவம்
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்னொரு சம்பவமும் நடந்தது. ஜெயா டிவி 23ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துப் பேசினார். இந்த வீடியோ ஜெயா ப்ளஸ் டிவியில் ஒளிபரப்பானது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துவிட்டதை இந்த சம்பவம் உறுதிபடுத்திய நிலையில் வெளிப்படையாக விரைவில் ஒன்றிணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

திடீர் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா இணையும் திட்டம் பற்றி வெகுநாட்களாக தகவல்கள் பரபரத்து வரும் நிலையில், இப்போதுதான் இரு தரப்பும் நெருங்கியுள்ளது. இந்த நிலையில், ஆதரவாளர்கள் உடனான சசிகலாவின் திடீர் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து கருத்துக் கேட்கிறாரா அல்லது, ஓபிஎஸ் உடன் இணையலாமா என்பது குறித்து கருத்துக் கேட்கிறாரா என அரசியல் பார்வையாளர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.

இதுதான் திட்டமா?
ஏற்கனவே, அதிமுக தனது தலைமையின் கீழ் ஒன்றாகச் செயல்படும் எனக் கூறியிருந்தார் சசிகலா. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் வகையில், ஓபிஎஸ் கரத்தை பலப்படுத்தும் விதமாக, தனது ஆதரவாளர்களை அனுப்பி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு சசிகலா அறிவுறுத்துவார் என்றும் ஒரு தகவல் சிறகடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications