முடிந்தது முடிந்ததுதான்! கெஞ்சிய காங்கிரஸ் தலைவரிடம்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன திமுக தலை?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் உறவு இனி மீண்டும் இணையா வாய்ப்பே இல்லை என்று திமுக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முடிந்தது முடிந்ததுதான்.. இனி காங்கிரசுடன் எந்தவித சமரசமும் அல்லது ஒட்டுப்போடும் பேச்சுவார்த்தையும் கிடையாது" என்று திமுக தரப்பு டெல்லியில் வெளிப்படையாகக் கூறிவிட்டதாம்.
அதே நேரத்தில், கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கும் விவகாரங்களில் அல்லது ஜனநாயகப் போராட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தர முடியுமே தவிர, தேர்தல் அரசியலில் காங்கிரசுடன் இனி கைகோர்க்க முடியாது என்பதை திமுக உறுதிபடத் தெளிவுபடுத்தியுள்ளது.

"முடிந்தது முடிந்ததுதான்... ஒட்ட வைக்க முடியாது!"
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கைகோர்த்த போதே இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு முற்றிலும் முறிந்தது. எனினும், தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக பவரை நிரூபிக்க திமுகவின் ஆதரவு அவசியம் என்பதால், காங்கிரசின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து சமாதானத் தூது அனுப்பி வந்தனர்.
இதற்கு திமுக மூத்த தலைவர்கள் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளனர்:
சமரசத்திற்கு வழியே இல்லை: "கடந்த காலம் முடிந்துவிட்டது. இனி மீண்டும் காங்கிரசுடன் ஒட்டிக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. மாநில அளவில் தவெகவுக்குப் பின்னால் சென்றுவிட்டு, டெல்லியில் எங்களுக்கு ஆதரவு கேட்பதை எங்களால் ஏற்க முடியாது."
இரட்டை நிலைப்பாடு எடுபடாது: "அதிகாரப் பகிர்வுக்காகத் தமிழகத்தில் ஒரு கட்சியுடனும், தேசிய அளவில் எங்களுடனும் உறவு பாராட்ட நினைப்பது சந்தர்ப்பவாத அரசியல். அதை திமுக ஒருபோதும் அங்கீகரிக்காது."
பாஜக எதிர்ப்பு போராட்டங்களுக்கு மட்டும் ஆதரவு: எல்லை நிர்ணயித்த திமுக
தேர்தல் கூட்டணி முறிந்தாலும், பாஜகவை எதிர்க்கும் பொதுப் பிரச்சனைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.
கொள்கை ரீதியான எதிர்ப்பு: அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் முறை மீதான சந்தேகங்கள், மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் போராட்டங்களில் மட்டுமே ஆதரவு நீடிக்கும்.
போராட்டம் மட்டுமே, கூட்டணி இல்லை: "பாஜகவை எதிர்ப்பதில் நாங்கள் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுள்ளோம். எனவே மக்கள் நலன் சார்ந்த மற்றும் ஜனநாயகப் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கள ஆதரவு தரப்படும். ஆனால், தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, அல்லது 'இந்தியா' கூட்டணியின் அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பங்கெடுப்பது போன்ற எதற்கும் இடமில்லை" என்று திமுக தெளிவுபடுத்தி உள்ளதாம்.
டெல்லி அரசியல் கணக்குகளில் சிக்கிய காங்கிரஸ்
திமுகவின் இந்த கறாரான முடிவு டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தவெகவுடன் உறவு வைத்துக்கொண்ட காங்கிரஸ், திமுகவின் ஆதரவை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணிகளுக்குப் பதிலாக வெறும் போராட்ட ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்பது, ராகுல் காந்தியின் அடுத்தகட்ட நாடாளுமன்ற வியூகத்திற்கும் பிரதமர் கனவிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
திமுகவின் இந்த முடிவின் மூலம், காங்கிரசுடனான கதவுகள் நிரந்தரமாக அடைக்கப்பட்டுவிட்டதும், எதிர்காலத்தில் மாநிலக் கட்சிகளைத் திரட்டி மாற்று சக்தியாக களம் காண்பதே திமுகவின் ஒரே திட்டம் என்பதும் உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
