பெரும் குழப்பங்களை ஏற்படுத்திய ‘பெட்ரோல் குண்டு’.. இவரா? அவரா? அடித்துக் கொள்ளும் திமுக, பாஜக!
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது யார் என்பதில் திமுக பாஜக இடையே பெரும் விவாதமே நடந்து வருகிறது.
வந்ததும் வராததுமாக: ஆளுநர் மாளிகையில் விஐபிக்கள் செல்லும் முதலாவது கேட் பகுதியில் கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனர். முன்னதாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதற்காக சிறை சென்றவர் கருக்கா வினோத். கடந்த 22ஆம் தேதி தான் ஜாமீனில் வெளிவந்த நிலையில்தான் இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

கருக்கா வினோத் மீது கிண்டி தலைமைக் காவலர் மோகன் அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை என்றும், நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்பட்டுவிட்டதாகவும் ராஜ் பவன் சரமாரியாக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக காவல் துறை டிஜிபியே விரிவாக விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக vs பாஜக: ஆளுநர் மாளிகை முன்பாக நடைபெற்ற இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், அரசு நிர்வாகத்திலும், அரசியலும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது. ஒருபுறம் தமிழ்நாடு காவல்துறை - ஆளுநர் மாளிகை இடையே கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், இன்னொரு புறம் திமுக - பாஜக இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது என சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்த திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார்.
— DMK IT WING (@DMKITwing) October 26, 2023
அம்பலமான பாஜகவின் தனக்குத் தானே வெடிகுண்டுத் திட்டம்! pic.twitter.com/vWj2ezZIq4
அண்ணாமலை, என்ன விளையாட்டு இது?: மேலும், கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார், பாஜகவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருப்பதாகக் கூறி திமுக ஐடி விங் புகைப்படங்களை வெளியிட்டது. "ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்த திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார். அம்பலமான பாஜகவின் தனக்குத் தானே வெடிகுண்டுத் திட்டம்!" என திமுக ஐடி விங் விமர்சித்தது.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, "ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் என்கிற குற்றவாளியை ஏற்கனவே சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவை சேர்ந்தவராம். திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் தான் ஜாமீனில் எடுத்தவராம். அண்ணாமலை, என்ன விளையாட்டு இது!!
அம்பலப்பட்டுட்டீங்களே: சொந்த கட்சி அலுவலகத்தில் குண்டு வீசியவனை கட்சி மாவட்ட தலைவரை ஜாமீனில் எடுப்பாராம். சட்டம் ஒழுங்கு கெட்டுப்போச்சுனு மாநில தலைவர் அறிக்கை விடுவாராம். சொந்த கட்சி அலுவலகத்தில் குண்டு வீசியவரை கட்சியின் அந்த மாவட்ட தலைவரை ஜாமீனில் எடுக்கிறார் என்றால்... நீங்க சொல்லியா? இவ்வளவு சீக்கிரம் அம்பலப்பட்டுட்டீங்களே அண்ணாமலை.." என பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர்.
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 26, 2023
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர்… https://t.co/4MzcF6nTir pic.twitter.com/ddasD972Av
இந்நிலையில், திமுகவுக்கு பதிலடியாக பாஜக, "ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது.
திமுக காரங்க: பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார். அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்பந்தப் பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததாக திமுகவினரால் குற்றம்சாட்டப்படும் முத்தமிழ் செல்வக்குமார், "வழக்கறிஞர் என்ற முறையில் பல கட்சியினரை பிணையில் எடுத்துள்ளேன். எல்லா கட்சியினர் மீதான வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளேன். அந்தவகையில் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுக்க உதவினேன். எனக்கும் கருக்கா வினோத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. தற்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
ஒரே குழப்பமப்பா: முத்தமிழ் செல்வக்குமாரே, தான் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், திமுக நிர்வாகிகள் தான் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன என தமிழக பாஜக பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவங்களை எல்லாம் பார்த்து சாமானிய மக்கள் குழப்பத்தில் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் சூழல் தான் இருக்கிறது. எது எப்படியோ, இந்த விவகாரத்தில் பெரும் அரசியல் தலையீடுகள் இருப்பது மட்டும் தெளிவாகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications