இதான் "ஸ்டாலினிசம்".. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த விளக்கம்! ஒரு நாள் லீவ் விட்டா 5 நாள் லாஸ்! அட!
சென்னை : இன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'ஸ்டாலினிசம்' என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மேலும், பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

சட்டப்பேரவையில்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பதிலுரை ஆற்றிப் பேசினார்.

ஸ்டாலினிசம்
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆடும் மாட்டை ஆடிக் கறந்து, பாடும் மாட்டை பாடிக் கறந்து, அரசின் திட்டம் எனும் பாலினை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம் எனத் தெரிவித்தார். மேலும், தந்தை ஸ்தானத்திலிருந்து 'நான் முதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார். ஐநா சபையில் கல்வி மாற்றம் என்ற மாநாட்டில் இல்லம் தேடிக்கல்வி தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதுதான் ஸ்டாலினிசம் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் லீவு விட்டா 5 நாள் லாஸ்
மேலும் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்து நாள் இழப்பு. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களை ஒரு போதும் கைவிடாது. 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 68.47 கோடி பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250 கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்.

ஹைடெக் கணினி ஆய்வகங்கள்
ரூ.175 கோடியில் 2996 அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ரூ.9 கோடியில் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். பள்ளிகள் புணரமைக்கப்பட்டு வருகிறது. 6 ஆயிரம் வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட உள்ளது. ரூ.150 கோடியில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் மாபெரும் 'வாசிப்பு இயக்கம்' அரசுப் பள்ளிகளில் நூலகச் செயல்பாடுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விளையாட்டு சிறப்பு பள்ளிகள்
ரூ.9 கோடியில் விளையாட்டு சிறப்பு பள்ளிகள் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். வேலை வாய்ப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக தொடங்கப்படும். ரூ.8 கோடியில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட உபகரணங்கள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications