"இது தான் திராவிட மாடலுக்கும் ஆரிய மாடலுக்கும் உள்ள வேறுபாடு".. விளாசிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. ஆனால் நம் முதலமைச்சர் கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனையை திறக்க அழைத்துள்ளார் . இதுதான் திராவிட மாடலுக்கும் ஆரிய மாடலுக்கும் உள்ள வேறுபாடு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்தன. பாஜகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் சில கட்சிகள் மட்டுமே நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்றன.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்காததை சுட்டிக்காட்டி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, குடியரசுத் தலைவர் என்பவர் பாஜவை பொறுத்தவரை தாழ்ந்தவர், இதுதான் அவர்களுடைய சனாதான பார்வை.
ஆனால் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரில் கட்டப்பட்டுள்ள கிண்டி கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனையை திறக்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஒரு மாதத்திற்கு முன்பே நேரில் போய் அழைத்துள்ளார் நமது முதலமைச்சர் முக ஸ்டாலின். இது தான் திராவிட மாடலுக்கும் ஆரிய மாடலுக்கும் உள்ள வேறுபாடு." இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications