அடிதூள்! சென்னை டூ நெல்லை விடுங்க.. தமிழகத்திற்கு வரும் புது வந்தே பாரத்.. எந்த ரூட்டில் தெரியுமா?
சென்னை: நாடு முழுக்க வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து முக்கிய இடத்திற்கு மிக விரைவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே மிகவும் விரிவான ரயில் கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் அனைத்து முக்கிய பகுதிகளும் ரயில் மூலம் இணைக்கப்பட்டதாகவே இருக்கும்.

விலை குறைவு, எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், இரவில் படுத்துக் கொண்டே செல்லலாம், டாய்லெட் வசதி இருப்பது எனப் பல காரணங்களால் பொதுமக்கள் ரயிலில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.
வந்தே பாரத் ரயில்கள்: இதன் காரணமாகவே 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்கள் ஓபன் ஆனாலும், அவை வேகமாக விற்றுத் தீர்ந்துவிடும். குறிப்பாகப் பொங்கல்., தீபாவளி அல்லது அதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் ரயில் டிக்கெட்கள் பல வாரங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடும். இது இந்தியர்கள் எந்தளவுக்கு ரயிலில் பயணிப்பதை விரும்புகிறார்கள் என்பதையே காட்டுவதாக அமைகிறது. அதேநேரம் ரயில்களில் பிரச்சினை இல்லாமல் இல்லை.
நமது நாட்டில் இருக்கும் ரயில்களில் அதிநவீன வசதிகள், மின்னல் வேகத்தில் பயணிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்திய ரயில்வே வந்தே பாரத் எக்ஸ்பிரஸை உருவாக்கினர். இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், முற்றிலும் ஏசி பெட்டிகள், பயோ கழிப்பறைகள் என்று அதிநவீன வசதிகள் கொட்டி கிடக்கிறது. மேலும், இவை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
ரயில் பெட்டிகள்: குறிப்பாகச் சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தான் இவை ரெடியாகிறது. முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டில் பிப்ரவரி 15ஆம் தேதி இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே இதற்கு மிகச் சிறப்பான ஆதரவு கிடைத்தது. இதனால், அவை மெல்ல பல்வேறு வழித்தடங்களில் விரிவுபடுத்தப்பட்டன.
இப்போது நாடு முழுக்க 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. தொடர்ந்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்தியன் ரயில்வே-இன் இலக்காக இருக்கிறது. அதன்படியே வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
சென்னைக்கு மற்றொரு ரயில்: முற்றிலும் மின் மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில்களைக் கொண்டு வர முடியும் என்பதால் அதற்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தான் வந்தே பாரத் ரயில்களால் அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். இருப்பினும், தண்டவாளம் அந்தளவுக்கு அப்கிரேட் செய்யப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இப்போது அதிகபட்சமாக 120 கிமீ வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகிறது. வேகத்தை அதிகரிக்கவும் ஒரு பக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அடுத்த மாதம் புதிதாக மூன்று முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தண்டவாளங்கள் மின் மயமாக்கும் பணிகள் முடிந்த நிலையில், மூன்று வந்தே பாரத் ரயில்கள் வருகிறது. கோரக்பூரில் இருந்து லக்னோ, சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் ஜோத்பூரில் இருந்து சபர்மதி என்று மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வந்தே பாரத்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டிற்கும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் கொண்டு வர உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்போது சென்னை- திருப்பதி ரூட்டிலும் வந்தே பாரத் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications