இப்படியே யோசிச்சிட்டிருந்தா எப்படி வாசன் சார்.. சட்டுப்புட்டுன்னு முடிவுக்கு வாங்களேன்!
Recommended Video

- கோயா
சென்னை: எங்கே செல்லும் இந்தப் பாதை என்ற ரேஞ்சுக்கு படு விரக்தியாக காணப்படுகிறதாம் தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரம். ஜி.கே.வாசன் தெளிவான முடிவெடுக்காமல் அமைதி காத்து வருவதால் கட்சியினர் அப்செட்டாக உள்ளனராம்.
சென்னையிலிருந்தபடி டெல்லியையும், டெல்லிக்குப் போனால் தமிழகத்தையும் கிடுகிடுக்க வைத்தவர் ஜி.கே.மூப்பனார். ஆனால் அவரது மகனான ஜி.கே.வாசனிடம் அந்த டச் இல்லாமல் போய் விட்டது. தற்போது அரசியலில் கிட்டத்தட்ட அவர் ஒதுக்கி ஓரம் கட்டப்பட்டு விட்டார்.
காங்கிரஸ் கட்சியில் வாசன் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் அவருக்கு முக்கிய இலாகாக்கள் கொடுத்து கவுரப்படுத்தினார் சோனியா. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 10 ஆண்டு காலம் மத்திய அமைச்சர் பதவியை அனுபவித்து விட்டு ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார்.

யாரையும் காணோம்
கட்சி தொடங்கியபோது அவருடன் இருந்த முக்கியத் தலைவர்கள் யாரும் இப்போது வாசனுடன் இல்லை. பீட்டர் அல்போன்ஸ், சாருபாலா தொண்டைமான், மகேஸ்வரி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாசனை விட்டு பிரிந்தனர்.

தங்கமும், ஞானசேகரனும்
வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ.கோவை தங்கம், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் மறைந்த மூப்பனார் மீது உள்ள விசுவாசத்தால் வாசனோடு உலா வருகின்றனர். அதேபோல், விடியல் சேகரன், யுவராஜ் போன்றோரும் வாசன் மூலம் பலன் அனுபவித்த காரணத்தால் அவரை சுற்றி வருகின்றனர்.

பரிதாப நிலைதான்
மாவட்ட அளவில் எடுத்துக்கொண்டால் மூப்பனார் காலத்து நபர்கள் மட்டும் பெயரளவுக்கு இயங்கி வருகின்றனர். இந்நிலையில் தமது அபிமானிகளுக்கு பதவியை பெற்றுக்கொடுக்க கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முகாமுக்கு காவடி எடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் தனது பிடிவாதத்தால் அந்த முயற்சியில் வாசன் தோல்வியை தழுவினார்.

இழப்புதான் மிச்சம்
இதையடுத்து மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தன்னிடம் இருந்த நிர்வாகிகளை இழந்தது தான் வாசனுக்கு மிச்சம். இதனிடையே வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடிக்குமாறு மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வாசனை வாசமில்லாதவராக கருதுகிறதாம் திமுக. இதனால் பாஜக தரப்பிலும் வாசனிடம் பேச்சு கொடுக்கப்பட்டதாம். ஆனால் வாசன் ரொம்பவே யோசிக்கிறாராம்.

இப்படியே இருந்தால் எப்படி
இப்படி தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவெடுக்க முடியாமல் வாசன் திணறுவதைக் கண்டு த.மா.கா. நிர்வாகிகள் புலம்புகிறார்களாம். வாசன் மீது மிஸ்டர் கிளீன் இமேஜ் உள்ளதால் அவரை திமுக கூட்டணியில் இழுத்துப்போட்டு பிரச்சாரத்திற்கு பயனபடுத்தவும் அறிவாலயத்தில் ஒரு குரூப் முயற்சி செய்கிறதாம்.
சட்டுப்புட்டுன்னு ஏதாச்சும் பார்த்து பண்ணி விடுங்கப்பா.












Click it and Unblock the Notifications