விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது ஏன்? வந்து விழுந்த கேள்வி.. மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபர பதில்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்குப் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விளக்கமளித்துள்ளார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த டிச.28ஆம் தேதி காலமானார். இது தமிழகம் முழுக்க இருந்த விஜயகாந்த் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பல ஆயிரம் மக்கள் சென்னையில் குவிந்தனர்.

அதேபோல மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த்: இதற்கிடையே இந்தியாவில் மிகவும் உயரிய விருதான பத்ம பூஷன் விருது விஜயகாந்த்திற்கு அறிவிக்கப்பட்டது. நமது நாட்டை பொறுத்தவரைப் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு இந்த பத்ம விருதுகள் வழங்கப்படும். இதற்கிடையே குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்குப் பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. இருப்பினும், விஜயகாந்த் மனைவியும் தேமுதி பொது செயலாளருமான பிரேமலதா நன்றி தெரிவித்தார். அதேநேரம் விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே இந்த விருதைக் கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன் அதை வாங்கியிருப்போம் என்றும் விஜயகாந்த்திற்குக் காலம் கடந்து பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
மத்திய இணை அமைச்சர் எல் முருகன்: இதற்கிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பத்மபூஷன் விருது விஜயகாந்த்திற்குக் கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கினார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் எல் முருகன் கூறுகையில், "விஜயகாந்த் மீது பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் அன்பு இருக்கிறது. தலைசிறந்த போலீஸ் அதிகாரியாக.. நேர்மையான அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் நடித்துள்ளார்.
விருது எதற்காக: விஜயகாந்த்தின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்குப் பத்ம பூஷன் விருதை வழங்குகிறது. அவரது சேவையைக் கவுரவிக்கும் வகையிலேயே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் சேவையாற்றிய அவரது உடலுக்கு அஞ்சி செலுத்தியுள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications