மெட்ரோ+ பஸ்+ரயில்.. ஒரு கார்டு இருந்தால் போதும்! சென்னை மெட்ரோவின் கலக்கல் திட்டம்! எப்படி சாத்தியம்
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இப்போது இதில் புதிய வசதியைக் கொண்டு வர உள்ளனர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. உற்பத்தி, ஐடி, சினிமா என அனைத்து துறைகளுக்கும் முக்கியமான மையமாக நமது தலைநகர் சென்னை இருக்கிறது. இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு மக்கள் வருகிறார்கள்.

இதனால் நாளுக்கு நாள் சென்னை நெரிசல் மிகுந்த நகரமாகவே மாறி வருகிறது. சாலைகளில் டிராபிக் என்பது தவிர்க்கவே முடியாது பிரச்சினை ஆகிவிட்டது. பீக் ஹவர்ஸில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை..
சென்னை மெட்ரோ: நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிராபிக்கை குறைக்கத் தமிழ்நாடு அரசுடன் இணைந்து சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாகவே எத்தனை சாலைகள் அமைத்து பாலங்களைக் கட்டினாலும் கூட டிராபிக்கை குறைக்க முடியாது. டிராபிக் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றால் நாம் முடிந்த வரை பொதுமக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைக்க வேண்டும். அதிகப்படியான மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினால் டிராபிக் குறையும்.
சென்னையில் இப்போது பேருந்து, மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் என பொது போக்குவரத்து இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோவுக்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது சென்னையில் இரண்டு ரூட்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வரும் நிலையில், மேலும் 3 ரூட்களில் அது விரிவுபடுத்தப்பட இருக்கிறது. அதற்கான பணிகளும் மற்றொரு புறம் தீவிரமாக நடந்து வருகிறது.
புது தொழில்நுட்பம்: இப்போது சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மெட்ரோ நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளே காரணம். ஏற்கனவே ஆன்லைன் வழியாக டிக்கெட் எடுத்தாலும் ஸ்மார்ட் கார்டு மூலம் டிக்கெட் எடுத்தாலும் 20% சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதாந்திர பயணத்திற்குத் தனி பாஸ் எனப் பல திட்டங்களை அறிவித்து பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
இதற்கிடையே இப்போது அடுத்தகட்டமாக மற்றொரு வசதியைக் கொண்டு வர உள்ளனர். இப்போது பயன்படுத்தப்படும் மெட்ரோ கார்டிற்கு பதிலாக National Common Mobility Card மூலம் தரப்படும் கார்டுகளை முழுமையாகத் தர உள்ளனர். இதை அவர்கள் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து மேற்கொள்கிறார்கள். இப்போது இருக்கும் மெட்ரோ கார்டை போலவே இந்த கார்டை வைத்துக் கொண்டு நாம் எளிமையாகச் சென்னை மெட்ரோவில் பயணிக்கலாம்.
அதையும் தாண்டி இதில் பல வசதிகள் உள்ளன. அதாவது சென்னை மட்டுமின்றி வெளியூர் சென்றால் அங்கிருக்கும் மெட்ரோவிலும் கூட இந்த கார்டை வைத்து நாம் பயன்படுத்தலாம். இது மெட்ரோ பயணத்தை ரொம்பவே எளிமையான ஒன்றாக மாற்றும். இந்த வசதி இப்போதும் இருக்கிறது என்ற போதிலும் இந்த கார்டின் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளனர்.
அதாவது மெட்ரோ மட்டுமின்றி மாநகர பேருந்துகளிலும் இந்த கார்டை பயன்படுத்தும் வசதி விரைவில் வருகிறது. மேலும், மின்சார ரயிலில் பயணிக்கும் வசதியும் சேர்க்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் இந்த ஒரு கார்ட்டை வைத்துக் கொண்டே சென்னையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
எப்படி சாத்தியம்: எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு டெமிட் கார்டு போலச் செயல்படும். அதாவது இந்த கார்டை நாம் வங்கிக் கணக்குடன் இணைத்துவிட்டால் எளிமையாக மெட்ரோவில் பயணிக்கலாம். மெட்ரோ ரயில் பயணம் மட்டுமின்றி, பார்கிங் கட்டணம், ஷாப்பிங் என அனைத்தையும் நம்மால் இதை வைத்துக் கொண்டு செய்ய முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.












Click it and Unblock the Notifications