தமிழ்நாட்டில் அடித்து தூக்கும் திமுக.. ஆனால் உயரும் அதிமுக, பாஜக வாக்கு சதவீதம்.. தந்தி டிவி கணிப்பு
சென்னை: திமுக, அதிமுக, பாஜக, நாதகவிற்கு வாக்கு சதவீதம் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து தந்தி டிவி கணிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது அதிமுக மற்றும் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் நாம் தமிழர் கட்சிக்கு குறைந்துள்ளது என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, பாமக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கி உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே மொத்தமாக அடித்து தூக்கும் என்றே கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.
தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தந்தி டிவி தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி, திமுகவின் வாக்கு சதவீதம் ஒரே அளவில் உள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம், அதிமுக, பாஜகவின் வாக்கு சதவீதம் உயரும் என்றும் கூறியுள்ளது. அதேநேரம் கடந்த முறையைவிட இந்த முறை எடுத்த கணிப்பில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அந்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
கடந்த பிப்ரவரி மாதம் எடுத்த கணிப்பில் திமுகவிற்கு 42 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று தந்தி டிவி கணித்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 16ம் தேதியான இன்று வெளியிட்ட கணிப்பிலும் 42 சதவீதம் தான் திமுகவிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதேநேரம் அதிமுகவிற்கு கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 30 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், ஏப்ரலில் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பாஜக கூட்டணிக்கு கடந்த பிப்ரவரியில் 13 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது ஏப்ரலில் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த முறை 8 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் ஏப்ரலில் எடுத்த கணிப்பில் 5 சதவீதமாக சரிந்துள்ளதாக தந்தி டிவி கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பெரும்பாலான தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்றே தந்தி டிவி கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications
