செந்தில் பாலாஜியை.. திக்குமுக்காட வைத்த அமலாக்கத்துறையின் "ட்ரங்க்" பெட்டி.. உள்ளே என்ன இருந்தது?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர்.
5 நாட்கள் விசாரணை: இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். இதுவரை 5 நாட்கள் விசாரணை முடிந்துள்ளது. கடந்த 5 நாட்களாக அவரிடம் தீவிரமாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. பொதுவாக அமலாக்கத்துறை விசாரணைகள் எஸ் ஆர் நோ மாதிரி கேள்விகளாக இருக்கும். அதில் வரும் பதில்களை வைத்து கிளை கேள்விகளை கேட்பார்கள். இதற்கு விளக்கமாக பதில் அளிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியிடம் அப்படி எஸ் ஆர் நோ கேள்விகள் இந்த நாட்களில் 50 கேட்டுள்ளனர். இதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து கிளை கேள்விகள் 40 கேட்டுள்ளனர். இதற்கு செந்தில் பாலாஜி விரிவாக பதில் அளித்து இருக்கிறார். சில விஷயங்கள் குறித்து அவர் நீண்ட நேரம் விளக்கங்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் அமலாக்கத்துறை ரெக்கார்ட் செய்துள்ளது.
ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட கேள்விகள் பலவற்றை செந்தில் பாலாஜியிடம் கேட்டுள்ளனர். இதை ஒரு பக்கம் ரெக்கார்ட் செய்ய இன்னொரு பக்கம் அதை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் டைப் செய்துள்ளார். செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலங்கள் அமலாக்கத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை மேலும் கஸ்டடியில் எடுக்கவும், அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை விரும்பும் என்கிறார்கள்.
பதில் என்ன: விசாரணையில் பல ஆவணங்களை காட்டி அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி செந்தில் பாலாஜியிடம் இந்து சொத்துக்கள் எல்லாம் உங்களுடையதா என்று கேட்டுள்ளனர். சில ஆவணங்களை காட்டி செந்தில் பாலாஜியிடம் இதை கேட்டுள்ளனர். அதற்கு அவை என்னுடையது இல்லை என்று உள்ளார். உங்கள் தம்பியடையதா என்று கேட்டுள்ளனர். அதற்கும் என்னுடையது இல்லை என்று சொல்லி உள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்தது உண்மையா? அதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா? போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது.இதில் முதலீடுகள் மறைக்கப்பட்டு இருந்தால் அதற்கு உடந்தையாக இருந்தது யாரெல்லாம்?
இதில் பெறப்பட்ட பணம் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதா? செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கு இதில் தொடர்பு உள்ளதா? எந்தெந்த நிறுவனங்களில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டது. தற்போதைய அரசு நிர்வாகிகள் அதிகாரிகள் யாருக்கெல்லாம் இதில் பங்கு உண்டு என்று அதிகாரபூர்வமாக கேள்விகளை அமலாக்கத்துறை கேட்டதாக கூறப்படுகிறது.
அதுபோல அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை சுற்றி அமர்ந்து கொண்டு 3 பேர் கேள்வி கேட்க , ஒருவர் அதை டைப் செய்தபடி இருந்துள்ளார். அப்போது 7 ஆவணங்களை காட்டி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? உங்களின் சொத்து ஆவணங்கள் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். அதற்கு.. எனக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார்.
3000 பக்க அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications