"ஓபிஎஸை பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்க.." பிரஸ் மீட்டில் திடீரென கடுகடுத்த ஜெயக்குமார்! என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரத சாகு, அதிமுகவுக்கு எழுதிய கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையானது. இந்தச் சூழலில் இது குறித்து ஜெயக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவில் தேர்தல் பதிவாகும் வாக்குகள் என்பது பொதுவாக 55-65% வரை தான் இருந்து வருகிறது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள், தேர்தல் நேரத்தில் சொந்த ஊர் திரும்ப முடியாததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்சினையைக் கலையத் தேர்தல் ஆணையம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

பரபர கடிதம்
அதாவது, புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கு ஏதுவாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் அளிப்பது குறித்த கூட்டத்தை நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்காக அதிமுகவுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு எழுதியுள்ள இந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜெயக்குமார்
அதிமுகவில் இப்போது உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், இந்த கடிதம் பேசுபொருளாகியுள்ளது. ஒரு பக்கம் தான் கட்சியின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். மறுபுறம் பொதுச்செயலாளர் எல்லாம் இல்லை இன்னும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான் இருக்கிறது என்கிறார் ஓபிஎஸ். இந்தச் சூழலில் சத்யபிரத சாகு எழுதியுள்ள கடிதம் அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில் சென்னை தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் எடப்பாடி ஆதரவாளருமான ஜெயக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை
இந்தக் கடிதம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், "வரும் ஜன.16ஆம் தேதி டெல்லியில் தேர்தல் ஆணையம் ரிமோட் வோட்டிங் முறை குறித்த விளக்கக் கூட்டத்தை நடத்த உள்ளனர். புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த முறை தேர்தல் ஆணையம் கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் அவ்வளவு தான். ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்திலும் கூட எடப்பாடியைத் தான் அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அதேபோல இந்தியச் சட்ட ஆணையமும் எடப்பாடி பழனிசாமிக்குப் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் கடிதம் எழுதியிருந்தது. இதை மத்திய அரசின் அங்கீகாரமாகவே பார்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால், இந்தக் கூட்டம் அப்படி இல்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தக் கூட்டத்தை நடத்தினாலும், கூட இதைக் கடிதத்தை எழுதியது மாநில தேர்தல் ஆணையம். எனவே இந்த கடிதத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இதனால் எந்தவொரு தாக்கமும் ஏற்படப் போவதும் இல்லை. எங்களைப் பொறுத்தவரைக் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை எடப்பாடி தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. அந்த கடிதம் குறித்து அடுத்தகட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் இணைந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

ஓபிஎஸை பார்த்துச் சிரிக்கிறார்கள்
இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை அனுப்பவில்லை. மாநில தேர்தல் ஆணையம்தான் இந்த கடிதத்தை எழுதியுள்ளது. எனவே, இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரு வீடு (அதிமுக) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த வீட்டின் உரிமையாளர் என்ற முறையில் எங்களுக்குப் பெருமை இருக்கும். அப்போது யாரோ வந்து வீடு அவருக்குச் சொந்தம் என்று சொன்னால் யாராக இருந்தாலும் சிரிக்கத் தான் செய்வார்கள். அதுதான் இங்கு நடந்து வருகிறது" என்றார்.

திமுக மீது அட்டாக்
தொடர்ந்து ஆசிரியர் போராட்டம் குறித்துப் பேசிய அவர், "இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்குச் சம ஊதியம் என்பதை வலியுறுத்திக் கடந்த 27ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். துறையின் அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக உள்ளதால், அவருக்கு அந்த வேலை இருக்கும் போல.. அவர் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிக்க முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தால் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடுமையாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications