மனோஜ் பாண்டியன் உங்களை விட்டுவிட்டு போய்ட்டாரே? நொடியும் யோசிக்காமல் ஓ பன்னீர்செல்வம் சொன்ன பதில்!
சென்னை: ஆலங்குளம் தொகுதியின் எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் இன்றைய தினம் திமுகவில் ஐக்கியமானார். நெல்லை அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். இதற்கிடையே மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் இரண்டே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல்/ மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் இப்போதே தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எல்லாக் கட்சிகளும் தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இதனால் இப்போதே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பாகிவிட்டது.

திமுக
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பலமாக இருக்கிறது.. அதிமுகவைப் பொறுத்தவரை அது பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்யவுள்ளது. இருப்பினும், அதிமுக வாக்குகள் பல பிரிவுகளாகப் பிரிவது, இன்னுமே எடப்பாடி தரப்புக்குப் பலவீனமாகவே இருக்கிறது. மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்தும் திமுகவில் முக்கிய தலைவர்கள் இணையும் போக்கும் தொடர்கிறது.
மனோஜ் பாண்டியன்
இந்தச் சூழலில் தான் ஆலங்குளம் சட்டசபையின் சிட்டிங் எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமானார். அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற அவர், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2021 சட்டசபைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடித்து மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக பிளவுபட்டபோது, ஓபிஎஸ் பக்கம் சென்ற அவர். அப்போது முதலே ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். இந்தச் சூழலில் தான் அவர் திமுகவில் இணைந்துள்ளார்.
ஓபிஎஸ்
சிட்டிங் எம்எல்ஏ திமுகவில் இணைந்தது ஓபிஎஸ் தரப்புக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். மனோஜ் மாண்டியன் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு அவர், "எல்லாம் நன்மைக்கே" என்று மட்டும் பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.
அதேபோல ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாலேயே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்த கேள்விக்கு ஓபிஎஸ், "செங்கோட்டையனை நீக்கியது அதிகார உச்ச நிலை. இது அழிவுக்குத் தான் வழிவகுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையன்
செங்கோட்டையனை பொறுத்தவரை அவர் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். கடந்த சில காலமாகவே அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும் அப்போது தான் தேர்தலில் வெல்ல முடியும் என்றும் அவர் கூறி வந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் தேவர் ஜெயந்தியின்போது அவர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஸை சந்தித்துப் பேசியிருந்தார். மூவரும் ஒரே காரிலும் கூட பயணித்தனர்.
இந்தச் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது நடந்த மறுநாளே செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதால் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications