"துர்காவுடன்".. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என சொல்லி நிமிர்ந்தால் "அவர்" முகம்.. பூரித்த முதல்வர்
உங்களில் ஒருவன் நூலில் என்ன எழுதியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: உங்களில் ஒருவன் சுயசரிதையில், முதல்வர் ஸ்டாலின் என்னதான் எழுதியிருக்கிறார் என்ற சஸ்பென்ஸ்கள் ஏற்பட்டு வந்த நிலையில், அதில் ஒரு சில தகவல்கள் கசிந்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் - பாகம் 1 சுயசரிதை நூல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்று வருகிறது..
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற இந்த நூல் வெளியீட்டு விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார்.

ராகுல்காந்தி
இந்த விழாவில், சிறப்பு விருந்தினரான காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.. இந்த நூலை ராகுல்காந்தி வெளியிட, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பெற்றுக்கொள்கின்றனர். விழாவில், கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

என்ன சிறப்பு
இந்த புத்தகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் மிசாவில் கைதானது முதல், சென்னை மேயரானது, துணை முதல்வரானது, பிறகு முதல்வரானது வரை அத்தனை தகவல்களும் திரட்டி தரப்பட்டுள்ளதாம்.. அதற்கு மேல் வேறு விவரங்கள் பெரும்பாலும் தெரியாத நிலையில், தற்போது சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில், ஏராளமான சிறுவயது நினைவுகளை ஸ்டாலின் பகிர்ந்து கொண்டுள்ளாராம்.

திருமணம் - துர்கா
குறிப்பாக, "எனக்கு திரும்ப திரும்ப நினைவில் வரும் வார்த்தையாக பேரறிஞர் அண்ணாவின் மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற வார்த்தையே இருக்கிறது. எனக்கும் துர்காவுக்குமான திருமணம் திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் அகில இந்திய மாநாடாகவே நடந்தது. பொது வாழ்வை பூங்காவாக நான் எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத்தான் அப்போதும் இருந்துள்ளது...இப்போதும் இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

வழிகாட்டி நெறிமுறை
"மிகச்சிறு வயதுள்ள ஒருவன் தனது இலக்கை மிகச்சரியாகத் தீர்மானித்தால் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய தலைமுறைக்கு நான் சொல்லும் ஒற்றை வழிகாட்டி நெறிமுறை என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், "எவற்றையும் எதிர்கொள்ள வேண்டும், சமாளித்து வெற்றிகொள்ள வேண்டும் என்ற இரண்டு முடிவுகளையும் எடுத்துக்கொண்டுதான் எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன்" என்றும் ஸ்டாலின் நெகிழ்ந்து போய் அதில் எழுதியிருக்கிறாராம்.

2-ம் பாகம்
அதுமட்டுமல்ல, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நான் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது எனது மனக்கண்ணில் தலைவர் கலைஞர் முகம்தான் தெரிந்தது.. மிசா சிறைவாசத்தின் சித்திரவதைக் காட்சிகளை உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் சொல்வேன்" என்றும் தன்னுடைய சுயசரிதை நூலில் பதிவு செய்துள்ளாராம் முதல்வர்.. 2ம் பாகத்தையும் வெளியிடவேன் என்று முதல்வர் சொல்லி உள்ள நிலையில், அதற்கான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications