பதில் சொல்லுங்க அண்ணாமலை! திமுக இல்லையென்றால் உங்களுக்கு அந்தஸ்து ஏது? - கார்த்திகேய சிவசேனாபதி
சென்னை: கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்த்தது திமுக அரசு தான் என்றும் பிசி என்கிற கோட்டா இல்லாமல் அண்ணாமலையால் உயர்கல்வி படித்திருக்க முடியுமா எனவும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வினவியுள்ளார்.
Recommended Video
தமது கேள்விக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு எடுபிடிகளை வைத்து ஐடி விங் மூலம் அடாவடி செய்யாதீர்கள் என அண்ணாமலை மீது அவர் சீறியுள்ளார்.
இது தொடர்பாக கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

சமூக நீதி
''1970 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தன்னை போன்று ஆடு மாடுகள் மேய்த்து கொண்டிருந்த பலரையும் உங்களை போன்ற உயர் அதிகாரிகளாக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றது சமூக நீதி. கலைஞர் கொடுத்த ரிசர்வேஷன். கவுண்டர் என்று மட்டும் இருந்த பெயரை 1974ஆம் ஆண்டு கொங்கு வேளாளர் என்ற கூடுதல் பெயரையும் அளித்து கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்த்தவர் கலைஞர்.''

தனி மனித தாக்குதல்
''கலைஞர் கொடுத்த பிற்படுத்தப்பட்டோர் என்ற சலுகையை பயன்படுத்தி தான் நீங்களும் நானும் இன்னும் பலரும் இன்றும் உயர் அதிகாரிகளாக, வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, நீதியரசர்களாக உயர்ந்த அந்தஸ்தை பெற்றிருக்கிறோம். சமூக நீதி பற்றி தாம் கூறியிருந்ததற்கு எப்போது போல் நீங்கள் பதில் சொல்லாமல் உங்கள் பாஜக ஐடி விங் மூலம் அடாவடியும், அராஜகமும் செய்வதோடு தனி மனித தாக்குதலிலும் ஈடுபடுகிறீர்கள்.''

பதில் சொல்லுங்க
''அண்ணாமலை அவர்களே உங்கள் டிசியில் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பிசி (பேக்வார்ட் கிளாஸ்) வகுப்பை சேர்ந்தவர் நீங்கள் என இருந்ததா இல்லையா, அதை கொண்டு போய் கொடுத்து தான் கோவையில் பொறியியல் படிப்பில் சேர்ந்தீர்களா இல்லையா, அதேபோல் லக்னோ ஐஐஎம் -ல் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட்டீர்களா இல்லையா, பன்னிரெண்டாம் வகுப்பு முதல் யுபிஎஸ்சி தேர்வு வரை எந்த விண்ணப்பத்திலாவது நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கொங்கு வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர் எனக் குறிப்பிடவில்லை என உங்களால் கூற முடியுமா?''

அண்ணாமலைக்கு சவால்
''கலைஞர் கொடுத்த பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு என்ற சலுகையை நீங்கள் பயன்படுத்த வில்லை என்றால் அதற்கான ஆதாரத்தை கொடுங்க. இல்லையென்றால் உங்கள் டிவிட்டர் பக்கத்தில் என்னுடைய முன்னேற்றத்திற்கு கலைஞர் மற்றும் திமுகவின் பங்கு இருக்கிறது என பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுங்கள்.'' இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சாடியும் கேள்வி எழுப்பியும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்திகேய சிவ சேனாபதி.












Click it and Unblock the Notifications