எடப்பாடி- ஓபிஎஸ் இருக்கை விவகாரத்தில் விரைவில் தீர்வு? ஒரே வரியில் சபாநாயகர் அப்பாவு நறுக் பதில்
சென்னை: சட்டசபையில் ஓ பன்னீர்செல்வம் இருக்கை தொடர்பாக அதிமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாகச் சபாநாயகர் அப்பாவு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியான நிலையில், அப்போது எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதன்படி சட்டசபையிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓ பன்னீர்செல்வத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு அதிமுகவில் நடந்தது அனைவருக்கும் தெரியும். ஓ பன்னீர்செல்வும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இருக்கை விவகாரம்: மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ஆர் பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்வதாக அதிமுக அறிவித்தது. எனவே, சட்டசபையில் எடப்பாடிக்கு அருகே உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர் பி உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், அதைச் சபாநாயகர் அப்பாவு ஏற்கவில்லை. சட்டசபைக்குள் இருக்கையை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் அதிகாரம் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் தொடர்ச்சியாகப் பல முறை சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்குச் சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு: பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நீதிமன்றம் என்பது சட்டசபையையோ அல்லது சட்டசபை தலைவரையோ கட்டுப்படுத்தாது. கட்சி பிரச்சினை தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும். அது தனி விவகாரம்.
ஆனால், சட்டசபைக்குள் ஒரு உறுப்பினரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய முழு உரிமை சட்டசபை தலைவருக்கே இருக்கிறது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. எனக்கு முன்பு சட்டசபை தலைவராக இருந்த தனபாலும் இதையே சட்டசபையிலேயே கூறியிருக்கிறார்" என்றார்.
நேரலை விவகாரம்: தொடர்ந்து அவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்துப் பேசிய அவர், "சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்த போது வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் காண்பிக்க முடியாது என்றே பதில் கூறியிருந்தனர். இந்த வழக்கில் தான் வேலுமணி தன்னையும் இணைத்துக் கொண்டு, முழுமையாக நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அதை நோக்கித் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் நோக்கமும் அதுதான். முதற்கட்டமாகக் கேள்வி பதில் நேரம் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. முக்கிய தீர்மானங்கள், முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானங்களை நேரலையில் காட்டி வருகிறோம்.
நேரலை இல்லை: இந்தியாவில் பல மாநிலங்களில் நேரலையில் கட்டுப்படுவதில்லை. கேரளா, ஒடிசா என எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம். முழுமையாக நேரலையில் ஒளிபரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய அரசு நேரலையில் ஒளிபரப்பவே முடியாது எனச் சொல்லவில்லை. அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்றே சொல்கிறோம்.
1921 முதல் தற்போது வரை நடந்த அனைத்து சட்டசபை நிகழ்வுகளையும் ஆன்லைனில் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஸ்கேன் செய்து, இணையத்தில் அப்லோட் செய்துள்ளோம். குறிப்பிட்ட பேச்சு குறித்துத் தேட வேண்டும் என்றால் இணையத்திலேயே நீங்கள் அதை வைத்து எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற நவீனத் தொழில்நுட்பங்களை நாங்கள் புகுத்தி வருகிறோம். எந்தவொரு ஒளிவுமறைவும் சட்டசபை நிகழ்வுகளில் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
