வந்தது செக்..? இதுதான் பாய்ண்ட்.. ஆளுநருக்கு காலக்கெடு.. ஸ்டாலின் தீர்மானத்தின் பின்னணி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசிய பேச்சால் கடும் கோபம் அடைந்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு மசோதாவிற்கு ஒப்பதல் தர காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சட்டசபையில் இன்று தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தின் பின்னணி குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் அண்மையில் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ஆளுநர் பேசுகையில், "மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். 2வது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம்.
அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வகிப்பவர், அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும்...

ஆளுநர் பேச்சு: அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசு தலைவர். அந்த வகையில் குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர். இதை அரசியலமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதில் எந்த பிரச்சனையும் எழவில்லை. உங்களுடைய கடமையை நீங்கள் சரியாக ஆற்ற வேண்டும். அவ்வளவுதான் " என ஆளுநர் ரவி பதிலளித்தார்.
மசோதாக்களை நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாகவே அர்த்தம் என ஆளுநர் பேசிய பேச்சு கடும் சர்ச்சையானது. இதற்கு முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே சர்ச்கைக்கு பின்னர் ராஜ்பவன் சார்பில் ஆளுநர் என்ன பேசினார் என்பது ட்விட்டரில் வெளியிடப்பட்டது. அத்துடன் வெளியிட்ட ட்வீட் பதிவில், அரசியலமைப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்கள் ஏழாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் அதிகாரம் என்ன? மாநில அரசு என்னென்ன சட்டங்களை இயற்றலாம்? என கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஒரு கட்சிக்கு முழு பெரும்பான்மை இருப்பதை வைத்து அந்த கட்சி ஆளும் அரசு எந்த மசோதாவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதற்கு சட்ட அனுமதி வழங்கும் இடத்தில் தான் மாநில ஆளுநரின் பங்கு வருகிறது. ஆளுநரின் பணி, அந்த இயற்றப்பட்ட மசோதா மாநில அரசுக்குரிய அதிகார வரம்பை மீறாத வகையில் உள்ளதா என்பதை கண்காணிப்பது ஆகும். ஆளுநரின் பொறுப்பு அந்த இடத்தில் அரசியலமைப்பை பாதுகாப்பது ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டசபையில் தீர்மானம்: இந்நிலையில் இன்று தமிழக சட்டசபை கூடிய நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் தொடர்பாக விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்தும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதும் நான் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்லும்போதும் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை ஆளுநர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆளுநருக்கு எதிராக 2வது முறையாக தீர்மானத்தை முன்மொழிகிறேன். ஒரு அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறார் ஆளுநர்.* பற்றற்ற அடையாளம் உள்ளவராக ஆளுநர் இருக்க வேண்டும் என்றார்.

தீர்மானம்: ஸ்டாலின் கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால், சட்டசபைகளில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசும்,குடியரசுத் தலைவரையும் வலியுறுத்திதான் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் உரிய காலத்தில் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பின்னணி: உண்மையில் ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க இதுவரை காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆளுநரிடம் பண மசோதா தவிர மற்ற மசோதா செல்கிறது என்றால், அதை அவர் திருப்பி அனுப்பலாம்,அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.அதேநேரம் மசோதாவை திருப்பி அனுப்பினால் அதனை மீண்டும் சட்டசபை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்பதல் கொடுத்தாக வேண்டும்.இதுதான் அரசியலமைப்பு விதியாகும். இதற்கு இடையில் சட்ட நிபுணர்களுடன் மாநில அரசின் சட்டசபை மசோதாக்களுக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்பதால்,ஆளுநர்கள் கிடப்பில் போடுவது நடக்கிறது. ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் , எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. இது ஒருவகையில் ஆளுநரின் செயல்பாட்டிற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்வது போன்றது என்றாலும், மத்திய அரசு என்ன முடிவெடுக்கும் என்பதை மிகமுக்கியம் ஆகும். ஆளுநர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினால் தான்இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அதற்கு ஆளும் கட்சியான பாஜக மனது வைக்க வேண்டும். அப்போது தான் சாத்தியமாகும். அதேநேரம் குடியரசுத் தலைவரிடம் இந்த விவகாரத்தை எடுத்து சென்று எதிர்க்கட்சிகளால் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதால் தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications