சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வு என்ன?.. தென் மாவட்ட சுற்றுப்பயணம் கை கொடுக்குமா?
சென்னை: தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தோல்வியால் தற்போது அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் சசிகலா மீண்டும் வர வேண்டும் என ஒற்றை குரலை எழுப்பி வருகிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் எதிராக உள்ளனர்.
ஓபிஎஸ்ஸும் சசிகலா தலைமையை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. சசிகலாவுக்கு தென் மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கிறது. அவரது சமூகத்தினரும் அங்கு கணிசமாக உள்ளனர்.

தென் மாவட்டங்கள்
இதனால் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் திருச்செந்தூர் முருகன் கோயில், தென்காசி இலஞ்சி குமரன் கோயில்கள் என சென்றதால் இது ஆன்மிக பயணம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளதற்கு காரணம் தனக்கான செல்வாக்கை அறிவதற்காகத்தான் என கூறப்படுகிறது.

ஆன்மிக பயணம்
ஆன்மிக பயணமாக இருந்தாலும் அரசியல் பயணமாக இருந்தாலும் இந்த பயணம் சசிகலாவுக்கு கை கொடுக்குமா? அதிமுகவின் தலைமை பொறுப்பு கை மேல் வந்து சேருமா என்கிற எதிர்பார்ப்புகள் உள்ளது. என்னதான் 2ஆம் நிலை நிர்வாகிகளும் தொண்டர்களும் சசிகலா தலைமையேற்க அழைத்து வந்தாலும், சசிகலா அதுகுறித்து எதையும் கூறாமல் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்செந்தூர்
கடந்த இரு தினங்களுக்கு சசிகலாவை திருச்செந்தூரில் ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா சந்தித்து பேசினார். இது பெரும் அனலை கிளப்பியது. இதையடுத்து நேற்றைய தினம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து ஓ ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கினர். இதையடுத்து ஓ ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் சசிகலாவை சந்திக்கும் விவகாரம் அண்ணன் ஓபிஎஸ்ஸுக்கு தெரியாது என கூறியது பல கேள்விகளை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்ஸுக்கு தெரியாது
தான் சென்றது ஓபிஎஸ்ஸுக்கு தெரியாது என்றால் இதை சசிகலாவை சந்தித்த அன்றே ஓ ராஜா தெரிவித்திருக்கலாமே. ஒரு நாள் அமைதியாக இருந்துவிட்டு நீக்கிய பிறகு இவ்வாறு கூறியுள்ளது ஏன்? அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியில் தங்களை சேர்த்துக் கொள்ளுமாறு ஓபிஎஸ்ஸை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அது போல் ஓ ராஜாவும் கோரிக்கை விடுப்பாரா? ஏற்கெனவே ஓ ராஜா மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் மன்னிப்பு கேட்டவுடன் அவர் கட்சியிலும் பொறுப்பிலும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். எனவே ஓ ராஜா நீக்கம் குறித்த ஓபிஎஸ்ஸின் அறிக்கையும் பொய்யா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

சசிகலா - ஓ ராஜா சந்திப்பு
இத்தனை நாட்கள் தொண்டர்கள், வெளியுலகிற்கு பரிட்சயம் இல்லாத நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவை சந்தித்தும் ஆதரவு தெரிவித்தும் வந்த நிலையில் ஓ ராஜாவே சசிகலாவை போய் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த சசிகலா இனி என்ன செய்வார்? வரவேண்டிய இடத்திலிருந்து பச்சை சிக்னல் கிடைத்தால் தென் மண்டலத்தில் இருக்கும் சசிகலாவை ஓபிஎஸ்ஸோ அல்லது ஓபிஎஸ்ஸை சசிகலாவோ போய் சந்திப்பார்களா?
Recommended Video

ஓபிஎஸ்- இபிஎஸ் முடிவு
அவ்வாறு சந்திக்கும் போது ஓபிஎஸ்ஸும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் இரு தினங்களாக சேலத்தில் ஆலோசனை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்வார்? உள்ளிட்ட கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்துதான் பதில்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications