மாற்றி யோசித்த இந்தியா.. ஒரே நாளில் 67000 கோடி மதிப்புள்ள டாலரை இறக்கிய ரிசர்வ் வங்கி.. சூப்பர்
மும்பை: உலக சந்தையில் கச்சா எண்ணைய் இறக்குமதிக்கு இந்தியா கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால், டாலாருக்கு செயற்கையாக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சியை தடுக்க ஒரே நாளில் ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் விற்பனை செய்து இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. ஒரே நாளில் ஏராளமான டாலர்களை இந்தியா விற்பதால், டாலர் தட்டுப்பாடு குறைவதுடன், இந்திய ரூபாயின் வீழ்ச்சி தடுக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்களால் நம்பப்படுகிறது.
பொதுவாக சந்தையில் ஒரு பொருளின் தேவை அதிகமாகி, அதன் சப்பளை குறைந்தால், அதன் விலை உயரும். உதாரணமாக வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் போது, திடீரென ஒருவர் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு தருகிறேன் என்று டன் கணக்கில் விற்றால், சந்தையில் வெங்காயத்தின் டிமாண்ட் குறையும். மக்களும் போட்டி போட்டு வாங்குவார்கள். அரசு பெரும்பாலும் விலையை குறைக்க இதைத்தான் செய்யும்.

அப்படித்தான் ரிசர்வ் வங்கியும் டாலருக்கு உள்ள டிமாண்டை குறைக்க விற்றுள்ளது. சந்தையில் டாலருக்கான தேவை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஏனெனில் ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால், உலகளாவிய முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் 50 சதவீதத்திற்கும் அதிகமான எரிபொருள் இறக்குமதி இந்த வழிப்பாதை வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்த சந்தை மூடப்பட்டுள்ளதால், மாற்று ஆதாரங்களைத் தேட வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது
இந்தியாவின் முக்கிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக இருந்த ரஷியாவும் தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கி உள்ளது. இதனால், மாற்று ஏற்பாடாக தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலவாணி கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களைப் பெருமளவில் செலவிட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல பொதுவாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பணம் டாலரில் தான் செலுத்த வேண்டும். இதனால் செயற்கையான தட்டுப்பாடு டாலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருவது ஒருபுறம் எனில், இந்தியாவைப் போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் கரன்சிகளுக்குப் பெரும் சவாலை டாலர் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.96-க்கும் மேல் சரிந்தது. இந்த வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரே நேரத்தில் டாலர்களை விற்பனை செய்து ரூபாயைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 24-ந்தேதி அன்று அந்நிய செலவாணி கையிருப்பில் இருந்து மொத்தம் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.67 ஆயிரம் கோடி) பொதுச் சந்தையில் விற்றிருக்கிறது. அண்மையில் ரிசர்வ் வங்கி நேரடியாக சந்தையில் தலையிட்டு டாலர் தட்டுப்பாட்டை குறைத்துள்ளது. ஒருவேளை ரிசர்வ் வங்கி தலையிடாமல் இருந்திருந்தால், ரூபாய் மதிப்பு இன்னமும் மோசமாக வீழ்ந்திருக்கும்.
கடந்த 24-ந்தேதி எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகளில் ரிசர்வ் வங்கி தனது அமெரிக்க டாலர் கையிருப்பான அந்நிய செலவாணியை அதிகளவில் விற்பனையை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தற்காப்பு நடவடிக்கையின் மதிப்பு 9 பில்லியன் டாலர்களை (ரூ.86 ஆயிரம் கோடி) ரிசர்வ் வங்கி விற்று இருக்கலாம் என்கிறார்கள்.
இந்தியாவின் தற்போதைய அந்நியச் செலவாணி இருப்பு 676.2 பில்லியன் டாலராக (ரூ.64.65 லட்சம் கோடி) வலுவாக இருக்கிறது. எனவே ரூபாயின் அதீத ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டுவருகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications
