கனமழையால் விடுமுறை.. பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு எப்போது.. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு தீவிரம் அடைந்துள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி , திண்டுக்கல், கரூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டன. இன்றும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. விடுமுறை விடப்பட்ட பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு எப்போது என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழக கடலோரப் பகுதிகளுக்கு பக்கமாக நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து குமரிக்கடல் நோக்கி நகர்ந்து வலு இழக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் கனமழை பெய்தது. சில இடங்களில் கன மழையும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்திருந்தது.
இந்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டன
தற்போது, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்த தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்களிடம் எழுந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 21 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும் போது, அரையாண்டு தேர்வு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
ஏற்கனவே, பெஞ்ஜல் புயல் காரணமாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு, ஜனவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிக்கிறது.அந்த இடைப்பட்ட நாட்களில், தற்போது, கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் அனைத்து மாவட்டங்களுக்கும் அரையாண்டு விடுமுறைக் காலம் 24.12.2024 முதல் 01.01.2025 வரை இருக்கும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications