பிஎம் கிசான் ரூ.2,000 நாளை ரிலீஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்? விவசாயிகள் இதை செக் பண்ணிட்டீங்களா?
சென்னை: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரப்போகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. ஆனால், பணம் வருவதற்கு முன்பு விவசாயிகள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு 24-வது தவணைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை அக்டோபர் 30-ம் தேதி தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் இருந்து இந்தத் தவணைத் தொகையை விடுவிக்கிறார்.

பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணை
பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணை நிதியை விடுவிக்கும் நிகழ்ச்சி பில்தி பகுதியில் நடைபெற உள்ளது. சுமார் 9.34 கோடி விவசாயிகளுக்கு இந்த நிதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.34 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குஜராத்தில் மட்டும் 52.33 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் சுமார் ரூ.1,051 கோடி நிதியைப் பெற உள்ளனர்..
ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் 23-வது தவணை கடந்த ஜூன் 20-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து 24-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில் நாளைய தினம் அக்டோபர் 30-ம் தேதி பணம் விடுவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
e-KYC கட்டாயம்.. பணம் வருமா?
இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் e-KYC சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியம். ஆதார் விவரங்கள், வங்கிக் கணக்கு இணைப்பு மற்றும் நிலப் பதிவுகள் ஆகியவற்றிலும் எந்தப் பிழையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், சில விவசாயிகளின் தகுதி குறித்து சந்தேகம் இருப்பதால், அவர்களுடைய விவரங்கள் நேரடியாக சரிபார்க்கப்படும் வரை நிதி நிறுத்தி வைக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிடுகிறது. குறிப்பாக, 2019 பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பிறகு நில உரிமை பெற்ற சிலர் மற்றும் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பலன் பெறும் சில பதிவுகள் இதில் அடங்கும்.
சரிபார்ப்பது இப்படித்தான்
விவசாயிகள் தங்களுக்கான தவணை தொகையின் நிலையை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சரிபார்க்கலாம். இதற்கு முதலில் பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அங்கு முகப்புப் பக்கத்தில் உள்ள Know Your Status என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, தங்களது பதிவு எண்ணைப் பதிவிட வேண்டும். பிறகு ஸ்கிரீனில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றினால், தவணைத் தொகை மற்றும் பணப் பரிமாற்றத்தின் தற்போதுள்ள நிலையை தெரிந்துகொள்ளலாம்.
பதிவுகளில் பிழைகள் இருந்தால் அல்லது e-KYC முடிக்கப்படாமல் இருந்தால், அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
அதனால் அக்டோபர் 30-ம் தேதி ரூ.2,000 கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகள், தங்களது தகுதி மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது அவசியம்.




Click it and Unblock the Notifications
