உள்ளாட்சித் தேர்தல் எப்போது? 37 மாவட்டங்களிலும் தாமதம்.. இதுதான் காரணமா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. ஏற்கனவே 28 மாவட்டங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில், இப்போது மேலும் 9 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. 2027 ஏப்ரல் வரை இவர்கள்தான் நிர்வாகத்தை கவனிக்கப் போகிறார்கள் என்றால், உள்ளாட்சித் தேர்தல் இன்னும் தாமதமாகுமா? அப்படியானால் கிராம மக்களின் பிரச்சனைகளை யார் சரி செய்வது?

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்றால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக வேலை செய்வதைப் பார்க்கிறோம். ஆனால், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய உள்ளாட்சித் தேர்தல் மட்டும் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

Tamil Nadu Local Body Elections

இப்போது 28 மாவட்டங்களில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறது தமிழக அரசு. இன்னொரு பக்கம், 9 மாவட்டங்களிலும் தனி அலுவலர்களை நியமித்திருக்கிறது.. அப்படியானால், அடுத்த உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும்? ஏன் இவ்வளவு தாமதம்? இதனால் கிராம மக்களுக்கு என்ன பாதிப்பு?

இதற்கு தமிழக அரசு சொல்லும் காரணம், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை மாற்றும் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதுதான்.

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகிறதா

சில கிராம ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணி நடக்கிறது. அதேபோல, புதிதாக 9 ஊராட்சி ஒன்றியங்களும் 93 கிராம ஊராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கேற்ப வார்டுகளின் எல்லைகளை மாற்ற வேண்டும். எந்தெந்த வார்டுகளில் யாருக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

இந்தப் பணிகள் முடிவடையாமல் தேர்தலை நடத்தினால், எந்த பகுதியில் யார் வாக்களிக்க வேண்டும், எந்த வார்டில் எத்தனை உறுப்பினர்கள் போட்டியிட வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படலாம். எனவே, தேர்தலுக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க வேண்டியது அவசியம்.

மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து தேர்தல் நடத்தப்படும் வரை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த பணிகள் எப்போது முடியும் என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி. அரசு தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் தாமதமாகும்போது அதன் தாக்கம் மக்களிடம்தான் முதலில் தெரியும்.

ஊராட்சி தலைவர் இல்லாமலா?

உதாரணத்துக்கு ஒரு கிராமத்தில் குடிநீர் சரியாக வரவில்லை என்று வைத்துக்கொள்வோம்.. தெருவிளக்கு எரியவில்லை, சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.. இதுபோன்ற பிரச்சினைகளை யாரிடம் கொண்டு செல்வது?

பொதுவாக, இதுபோன்ற பிரச்சினைகளை மக்கள் தங்கள் ஊராட்சி தலைவர் அல்லது வார்டு உறுப்பினரிடம் எடுத்துச் செல்வார்கள். மக்களுடன் நேரடியாகப் பழகும் பிரதிநிதிகள் என்பதால், அவர்களிடம் பிரச்சினையை சொல்வதும் எளிது... அதிகாரிகளிடம் கொண்டு செல்வதற்கும் அவர்கள்தான் உதவுவார்கள்.

ஏன் தாமதம்?

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாதபோது மக்கள் அதிகாரிகளையே அணுக வேண்டியிருக்கும். அதிகாரிகள் பணிகளை செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. அவர்கள் நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்த முடியும். ஆனால், மக்களிடம் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய உள்ளூர் பிரதிநிதிகள் இல்லாதது ஒரு குறையாக இருக்கலாம்.

குறிப்பாக, ஒரு பகுதியில் எந்தப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும், எங்கே ரோடு போட வேண்டும், எந்த பகுதியில் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற முடிவுகளில் மக்களின் குரல் நேரடியாக செல்வது முக்கியம்.

எனவே, தேர்தல் தாமதம் என்பது தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் பிரச்சினை மட்டுமல்ல. கிராமங்களில் வாழும் மக்களின் அன்றாட தேவைகளோடும் தொடர்புடையது.

அரசியல் கட்சிகள் கணக்கு?

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கிராமம் கிராமமாக அரசியல் கட்சிகள் கணக்கு போட ஆரம்பித்துவிடும்... எந்த ஊரில் நமக்கு செல்வாக்கு இருக்கிறது, யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்றெல்லாம் கட்சிகள் தீவிரமாக திட்டமிடும்.

ஊராட்சி தலைவர் பதவி முதல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி வரை பல பதவிகள் இருப்பதால், உள்ளூர் கட்சி நிர்வாகிகளும் இந்தத் தேர்தலை நிறையவே எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தேர்தல் நடந்தால்தான் தங்கள் பலம் என்ன என்பதையும் அவர்களால் காட்ட முடியும்.

இப்போது தேர்தல் தள்ளிப்போவதால், யாரை நிறுத்துவது, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த இடங்களைக் கொடுப்பது என்ற முடிவுகளை எடுப்பதிலும் தாமதம் ஏற்படலாம். அதேசமயம், கட்சிகள் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க இன்னும் கொஞ்சம் காலம் கிடைத்திருக்கிறது. ஆனால், தேர்தல் எப்போது நடக்கும் என்று தெரியாத நிலையில், எவ்வளவு காலத்துக்கு இப்படியே காத்திருப்பது என்பதுதான் கட்சிகளுக்கு இருக்கும் கேள்வி.

அரசுக்கு பெரிய சவால்

ஆனால், மக்கள் எவ்வளவு காலம்தான் தங்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருக்க முடியும்? இதுதான் அரசுக்கு இருக்கும் முக்கியமான சவால். தேர்தலை நடத்துவதற்கான வேலைகளை விரைவாக முடித்து, எப்போது தேர்தல் நடக்கும் என்பதை அரசு தெளிவாக சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், உள்ளாட்சித் தேர்தல் எப்போது வரும் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

மார்ச் மாதம் ஆகிருமோ

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை 2027 மார்ச் மாதத்துக்குப் பிறகு நடத்தும் நிலை இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால், தேர்தல் நடைபெறும் உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனால், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் எப்போது முடியும், தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கிராம மக்களை பொறுத்தவரை, தங்களுக்கான பிரதிநிதிகள் எப்போது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+